குறைவான மாத வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்கான கோரிக்கை!

0
70

அந்நியச் செலாவணி நெருக்கடியுடன் சேர்ந்து இந்த கடுமையான பொருளாதாரச் சரிவைக் கட்டுப்படுத்துவதற்கான தெளிவான மற்றும் நடைமுறைத் திட்டம் அரசிடம் இருப்பதாகத் தெரியவில்லை என சுதந்திர வர்த்தக வலய மற்றும் பொதுச் சேவை ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் தொடர்பில் கோரிக்கைகளை முன்வைத்து ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த கடித்தில்75,000 ரூபாவிற்கும் குறைவான மாத வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு 2020ம் ஆண்டின் முற்பகுதியில் காணப்பட்ட, அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தைத் தயாரிக்குமாறு உழைக்கும் வர்க்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

கட்டுப்பாடற்ற அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தினால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சுதந்திர வர்த்தக வலய மற்றும் பொதுச் சேவை ஊழியர் சங்கம் இந்த வாரம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எழுதிய கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.

ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் சாராம்சத்தில் சிலவற்றை உள்ளடக்கி “அப்பா எங்களுக்கு நடந்தது” என்ற தலைப்பில் துண்டுப் பிரசுரத்தை அச்சிட்டு விநியோகித்த தொழிற்சங்கத் தலைவர் அன்டன் மார்கஸ், இணைச் செயலாளர் பதவி வகிக்கும் சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொதுச் சேவை ஊழியர் சங்கம், எரிபொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக, போக்குவரத்து கட்டணங்கள் உட்பட அனைத்துப் பொருட்களின் விலைகளிலும் 40 வீதம் அல்லது அதற்கு மேற்பட்ட அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என சுட்டிக்காட்டியுள்ளது.

“அந்நியச் செலாவணி நெருக்கடியுடன் சேர்ந்து இந்த கடுமையான பொருளாதாரச் சரிவைக் கட்டுப்படுத்துவதற்கான தெளிவான மற்றும் நடைமுறைத் திட்டம் அரசிடம் இருப்பதாகத் தெரியவில்லை.

எனவே, எதிர்காலத்தில் உணவு மற்றும் பலசரக்குப் பொருட்களின் விலை மேலும் உயரும். இவர்களில், தனியார்த் துறை ஏற்றுமதித் தொழிலாளர்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள், விவசாயிகள் அதனுடன் தொடர்புடைய தொழிலாளர்கள் மற்றும் முறைசாரா பொருளாதாரம் மற்றும் கிராமப்புற சமூகத்தில் தினசரி ஊதியம் பெறுபவர்கள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.” 

இந்த நிலைமையை நிவர்த்தி செய்யும் நோக்கில் சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொதுச் சேவைகள் ஊழியர் சங்கம் மூன்று பிரதான முன்மொழிவுகளை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ளது.

01. இந்த வருட இறுதி வரை அந்நிய செலாவணி நெருக்கடியைத் தற்காலிகமாகத் தணித்து, நீண்ட கால அடிப்படையில் அதற்கு முன்மொழியப்பட்ட நிரந்தர தீர்வுகளை விரிவாக நாட்டுக்கு முன்வைத்தல்.

02. தனியார்த் துறை தொழிற்சங்கங்கள் கோரும் சம்பள அதிகரிப்புக்கு மேலதிகமாக, 2020 ஜனவரியில் மாத குடும்ப வருமானம் ரூ.75,000க்கு குறைவாக உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் எரிபொருள், மண்ணெண்ணெய், எரிவாயு, பாண், கோதுமை மா, அரிசி, சீனி, பருப்பு ஆகியவற்றைக் குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கு வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை இரண்டு வாரங்களுக்குள் ஆரம்பிக்கவும்.

03. மீனவர்களுக்கு மீன்பிடி படகுகளுக்குத் தேவையான எரிபொருளை மீன்பிடி கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் சலுகை விலையில் வழங்குதல்.

சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொதுச் சேவை ஊழியர் சங்கம், அரசியலைச் சீர்குலைக்காமல் அமல்படுத்தும் திட்டமொன்றையும் ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ளது. 

 1. ஒவ்வொரு கிராம சேவகப் பிரிவிலும் இரண்டு வாரங்களுக்குள் மாதம் 75,000 ரூபாய்க்குக் குறைவான வருமானம் பெறும் குடும்பங்களை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கவும்.

2. இந்த நலனுக்குள் நுழையும் பொது மற்றும் தனியார்த் துறை ஊழியர்களிடமிருந்து அவர்களின் பெப்ரவரி மாத ஊதியத்தின் சான்றளிக்கப்பட்ட நகலைப் பெறவும்,

 3. கிராம சேவகப் பிரிவில் உள்ள பயனாளிகளின் பட்டியலை உடனடியாக வெளியிடவும்,

4. பிரதேச செயலகப் பிரிவில் உள்ள ஒரு கூட்டுறவு, சதொச மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் பெயரைக் கோரவும், அங்கு குடும்பங்கள் தமது பொருட்களை இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

5. அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கவும்.

 மக்களின் அன்றாடத் தேவைகளுக்காக இவ்வாறான சலுகை விலையில் பொருட்களை வழங்குவதற்கான விரிவான திட்டமொன்றை முன்வைத்து, அது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு உடனடியாக சந்தர்ப்பம் வழங்குமாறு ஜனாதிபதியிடம் சிரேஷ்ட தொழிற்சங்கத் தலைவர் அண்டன் மார்கஸ் மேலும் தெரிவித்துள்ளார்.