இரண்டு கிலோ மீற்றர் நீளமான வரிசை: மயங்கி விழுந்த பெண்

0
63

இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மக்கள் நீண்ட வரிசைகளில் நின்று எரிபொருளை கொள்வனவு செய்து வருகின்றனர்.

நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் மற்றும் சமையல் எரிவாயு கொள்கலன் விற்பனை நிலையங்களுக்கு எதிரில் நீண்ட வரிசைகளில் மக்கள் பல மணி நேரம் நிற்பதை காணக் கூடியதாக இருக்கின்றது.

சில இடங்களில் மக்கள் இரவு முழுவதும் எரிபொருள் நிலையங்களுக்கு எதிரில் வரிசைகளில் இருந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. நகர புறங்களில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு எதிரில் இதனை பரவலாக காண முடிவதாக நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.

இவ்வாறான நிலையில் கொழும்பு ஒருகொடவத்தை பகுதியில் எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் எரிபொருளை கொள்வனவு செய்ய மக்கள் சுமார் இரண்டு கிலோ மீற்றர் தூரம் வரை வரிசையில் நின்றுள்ளனர்.

வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்த மண் எண்ணெயை கொள்வனவு செய்ய சென்றிருந்த பெண் ஒருவர் மயங்கி சுருண்டு விழுந்துள்ளார். அப்போது வரிசையில் நின்றுக்கொண்டிருந்த ஒருவர் அந்த பெண்ணுக்கு சிகிச்சையளிக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலையத்தளங்களில் வெளியாகியுள்ளது.