மண்ணெண்ணெய் பெற்றுக்கொள்வதில்பல்வேறு சிரமம்-மன்னார் மக்கள் விமர்சனம்!

0
74

மன்னார் நகர மத்தியில் அமைந்துள்ள மாந்தை மேற்கு பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் மக்கள் வீட்டுத் தேவைகளுக்கான மண்ணெண்ணையை பெற்றுக் கொள்வதில் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

தொடர்ச்சியாக குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு மாலை நேரங்களில் மண்ணெண்ணை வருகின்ற போதும் அதனை வீட்டு தேவைகளுக்காக சுமார் 5 லீற்றர் வரை பெற்றுக்கொள்வதில் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

எனினும் தொழில் நடவடிக்கைகளுக்காக கொள்கலன்களில் சுமார் 50 லீற்றர் முதல் 100 லீற்றர் வரை மண்ணெண்ணை வழங்கப்படுவதாக பாதிக்கப்பட்ட மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

நேற்று இரவு மன்னார் நகர மத்தியில் அமைந்துள்ள மாந்தை மேற்கு பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் மண்ணெண்ணை விநியோகிக்கப்பட்டது.

மக்கள் மண்ணெண்ணையை பெற்றுக் கொள்ள நீண்ட வரிசையில் நின்றனர். எனினும் வீட்டுப் பாவனைக்கான மண்ணெண்ணையை கொள்வனவு செய்ய வந்த மக்கள் அதிகமானவர்களுக்கு மண்ணெண்ணை கிடைக்கவில்லை.

தொழில் நடவடிக்கைகளுக்காக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சுமார் 20 லீற்றர் வழங்கப்பட்டுள்ளது.இதனால் வீட்டு தேவைகளுக்காக குறிப்பாக எரிவாயு தட்டுப்பாடு காரணமாக மண்ணெண்ணெய் அடுப்பினை பயன்படுத்துகின்றவர்கள் மண்ணெண்ணையை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர்.

மன்னார் நகர பகுதியில் இரு எரிபொருள் விற்பனை நிலையங்கள் இருந்தும் மக்கள் தமது நாளாந்த வீட்டுப் பாவனைக்கான மண்ணெண்ணையை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்கள் தமது வீட்டுப் பாவனைக்கான மண்ணெண்ணையை பெற்றுக் கொள்ள துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.