கொட்டகலை வர்த்தக சங்கம்அத்தியாவசிய பொருட்கள் தொடர்பில்அரசாங்கத்திடம் முன்வைத்த கோரிக்கை

0
67

அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக மலையக மக்கள் இன்று பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். மக்கள் பொருட்களைத் தேடி அங்கும் இங்கும் அலையும் நிலை உருவாகியுள்ளது. எனவே இது குறித்த அரசாங்கம் கவனமெடுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கொட்டகலை வர்த்தக சங்கத்தின் தலைவர் புஸ்பா விஸ்வநாதன் தெரிவித்தார்.

 அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு குறித்து இன்று (17) கொட்டகலை வர்த்தக சங்கம் ஏற்பாடு செய்திருந்து ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

மலையக மக்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்த போதிலும் அதுவும் இது வரை கிடைக்கவில்லை. இந்நிலையில் பெரும்பாலான தொழிலாளர்கள் இன்று நகரங்களுக்கு கூலி வேலைக்காக வருகை தந்துள்ள போதிலும் சீமந்து உட்பட கட்டட பொருட்கள் இல்லாததின் காரணமாக இன்று அவர்களும் தொழிலை இழந்துள்ளனர்.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மலையகத்தில் இன்று சீனி, மா, அரசி, பருப்பு பால்மா, எரிவாயு , மண்ணெண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வரலாற்றில் என்றுமில்லாத அளவுக்கு தட்டுப்பாடு காணப்படுகிறது இந்நிலையில் இவர்கள் வாழ்க்கையினை கொண்டு நடத்த முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

நாட்கூலிக்காக வேலை செய்யும் பெரும்பாலான குடும்பங்கள் தனது அன்றாட உணவினை கூட தேடிக்கொள்ள முடியாத ஒரு சூழ் நிலை ஏற்பட்டுள்ளது இதனால் அந்த குடும்பங்களில் குழந்தைகள் உட்பட அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக சூறையாடும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன.

ஆகவே இது குறித்துப் பொறுப்பு வாய்ந்தவர்கள் உரிய நடவடிக்கை எடுத்து இந்த மக்களுக்கான நிவாரணங்களைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அத்தோடு இன்று எரிவாயு இல்லாத காரணத்தினால் பல உணவகங்கள் சிற்றூண்டிசாலைகள் உட்பட வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

மின்சாரம் அடிக்கடி துண்டிக்கப்படுவதன் காரணமாக அதிகமான தொழில் துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. டீசல் தட்டுப்பாடு காரணமாக வாகன போக்குவரத்து சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் என பலரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இதனை நிவர்த்தி செய்வதற்குரிய உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் விசேட உரையினை மக்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். மக்களுக்கு ஏதாவது ஒரு வகையில் நிம்மதி கிடைக்கும் பொருட்கள் தட்டுப்பாட்டுக்குத் தீர்வு கிட்டும் என எண்ணியிருந்தனர். ஆனால் அந்த உரையில் எவ்வித பயனும் மக்களுக்குக் கிடைக்கவில்லை.” என அவர் மேலும் தெரிவித்தார்.