மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் 46-வது இன்று பிறந்தநாள் – ரசிகர்கள் கண்ணீர் வாழ்த்து

0
341

புகழ் பெற்ற கன்னட பவர் ஸ்டார் நடிகர் புனித் ராஜ்குமாருக்கு இன்று பிறந்த நாள். கடந்த ஆண்டு பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய புனித் ராஜ்குமாரின் ரசிகர்கள் இன்று சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

சென்னையில் பிறந்தவர் நடிகர் புனீத் ராஜ்குமார் (Puneeth Rajkumar). ராஜ்குமார் மற்றும் பர்வதம்மா தம்பதியினருக்கு 5-வது கடைசி மகனாக பிறந்தார்.

புனீத் ராஜ்குமார் 6 வயதாக இருக்கும் போது குடும்பத்தோடு மைசூருக்கு சென்றனர். 6 மாத குழந்தையாக இருக்கும் போதே கன்னடத்தில் வெளியான ‘பிரேமதா கனிகே’ என்ற படத்தில் நடித்திருந்தார்.

பின்னர், தொடர்ந்து குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்து வந்தார். கடந்த 2002ம் ஆண்டு வெளியான ‘அப்பு’ என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் புனித்ராஜ்குமார். நடிகரைத் தொடர்ந்து தயாரிப்பாளராகவும், பாடகராகவும் இவர் வலம் வந்தார்.

இந்நிலையில், இன்று புனித் ராஜ்குமாரின் 46-வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதனைடுத்து, இவரது ரசிகர்கள், பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் டுவிட்டரில் புனித் ராஜ்குமாருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் புனித் ராஜ்குமார் கடந்த அக்டோபர் 29ம் தேதி பெங்களூருவில் உள்ள தனது இல்லத்தில் வழக்கம்போல் உடற்பயிற்சி செய்தார். அப்போது, அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

இதனைத் தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், சிகிச்சை பலனின்றி புனித் ராஜ்குமார் உயிரிழந்தார்.

பெரும் ரசிகர்கள் பட்டாளம் கொண்ட புனித் ராஜ்குமார் மறைவு கன்னட திரையுலகம் மட்டுமல்லாமல், தென்னிந்திய திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. ஸ்ரீ கண்டீரவா ஸ்டூடியோவில் உள்ள பெற்றோர் நினைவிடம் அருகிலேயே புனித் ராஜ்குமாரின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்களும், திரைத்துறையினரும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். இறுதிச் சடங்கில் கர்நாடக மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, முன்னாள் முதலமைச்சர்கள் எடியூரப்பா, சித்தராமையா, முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி,. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

சினிமாவில் நடித்து விட்டோம் சம்பாதித்து விட்டோம் என்று இல்லாமல் சத்தமில்லாமல் அவர் செய்த உதவி அவர் மறைவுக்குப் பின்பு தான் வெளியே வந்தது.

1800 மாணவ மாணவிகளை படிக்க வைத்தது மட்டுமல்லாமல் முதியோர் இல்லங்கள், கோசாலை என்று சத்தமில்லாமல் பல உதவிகளை செய்துவந்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் தனது ரசிகர்களின் குடும்பத்திற்கு மறைமுகமாக பல உதவிகளைச் செய்து வந்திருக்கிறார். புனித் ராஜ்குமாரின் மறைவுக்குப் பின் அவரது இரு கண்களும் தானம் செய்யப்பட்டது.

இது அவரது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இறந்த பின்னும் அவர் செய்த கண் தானத்தால் இளைஞர்கள் பார்வை பெற்றனர்.

நடிகர் புனித் ராஜ்குமார் இந்த உலகத்தை விட்டு மறைந்தாலும், மக்கள் நெஞ்சில் என்றும் மறையாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.