கேப்டனை மாற்றிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி – கடைசி நிமிடத்தில் நடந்த ட்விஸ்ட்

0
382

ராஜஸ்தான் அணியின் கேப்டன் மாற்றப்பட்டதாக வெளியான தகவலால் ரசிகர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.

15வது ஐபிஎல் சீசன் தொடர் வரும் மார்ச் 26ம் தேதி முதல் தொடங்கி வரும் மே 29ம் தேதி வரை நடைபெறவுள்ளது. முதல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன.

இந்த தொடருக்காக ஒவ்வொரு அணியும் வித்தியாசமான முறையில் தங்கள் அணி வீரர்கள் குறித்தும், ஜெர்சி பற்றியும் விளம்பர வீடியோ வெளியிட்டு வருகிறது. இதனிடையே ராஜஸ்தான் அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சன் நியமிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் வெளியான ஜெர்சி அறிமுக வீடியோவில் கூட இடம் பெற்றிருந்தார்.

ஆனால் நேற்றைய தினம் ராஜஸ்தான் அணியின் ட்விட்டர் பக்கத்தில் அணியின் புதுகேப்டனுக்கு வாழ்த்துக்கள் என கூறி யுஸ்வேந்திர சாஹல் படம் இடம் பெற்றிருந்தது. ஒருநாள் இரவில் எப்படி கேப்டன் மாற்றப்படுவார் என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்தது.  அதேசமயம் சஞ்சு சாம்சனும் சாஹலுக்கு வாழ்த்து தெரிவிக்க குழப்பமடைந்த ரசிகர்கள் சரமாரியாக விமர்சிக்க தொடங்கினர்.

மேலும் இது எப்படி சாத்தியம் என ரசிகர்கள் குழம்பி கொண்டிருக்க ராஜஸ்தான் அணி நிர்வாகம் ட்விட்டர் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டதாக விளக்கமளித்தது. ஆனால்  அட்மினிடம் பாஸ்வேர்டை பெற்று யுஸ்வேந்திர சாஹல் தான் அத்தகைய பதிவை வெளியிட்டதாக கூறப்பட்டது இப்பிரச்சனை முடிவுக்கு வந்தது. மேலும் அஸ்வின், ஜோஸ் பட்லர் ஆகியோரையும் இந்த ட்விட்டரில் சாஹல் வம்பிழுத்து வைத்திருந்தார்.

இது ராஜஸ்தான் அணியின் விளம்பர யுக்தி என கூறப்பட்டாலும், இதனை கொஞ்சம் விளையாட்டிலும் செலுத்தினால் நடப்பாண்டு ஐபிஎல் கோப்பையை அள்ளலாம் என ரசிகர்கள் அட்வைஸ் செய்துள்ளனர்.