கே.பியின் சிறுவர் இல்லத்தில் சித்தரவதைக்குட்பட்ட சிறுமிகள் விபரீதமுடிவு!

0
65

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான கே.பி. என்ற குமரன் பத்மநாதன் நடத்தி வரும் சிறுவர் இல்லத்தில் இரண்டு சிறுமிகள் அலரி விதையை சாப்பிட்டுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

13 மற்றும் 14 வயதான இந்த சிறுமிகள் சம்பம் நடைபெற்ற தினத்தில், சிறுவர் இல்லத்தில் பெண் நிர்வாகியால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து சிறுமிகள் பாடசாலைக்கு சென்று அலரி விதைகளை சாப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சிறுவர் இல்லத்தின் தமக்கு நடக்கும் கொடுமைகளை சிறுமிகள் தமது நண்பிகளிடம் கூறியுள்ளதுடன் முல்லைத்தீவு பொலிஸார் ஊடாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சிறுவர் இல்லத்தின் பெண் நிர்வாகி, மிக கொடூரமாக தாக்குவதாகவும் அடிக்கடி சிறார்களை சித்திரவதை செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தாங்கிக்கொள்ள முடியாத காரணத்தினால், ஒரு வாரத்திற்கு முன்னர், 5 சிறுமிகள் சிறுவர் இல்லத்தில் இருந்து தப்பியோடியுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்த சிறுவர் இல்லத்தில் போர் காரணமாக பெற்றோர் மற்றும் உறவினர்களை இழந்த பிள்ளைகள் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த சிறுவர் இல்லத்தை நடத்தி வரும் கே.பி. என்ற குமரன் பத்மநாதன் விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகாரங்கள், ஆயுத விநியோகம் மற்றும் நிதி சம்பந்தமான பொறுப்புகளை வகித்து வந்ததுடன் இறுதிக்கட்ட போரின் பின்னர் தன்னை விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் என அறிவித்துக்கொண்டார்.எனினும் அவருக்கு எதிராக இதுவரை இலங்கை அரசு பயங்கரவாத குற்றச்சாட்டின் கீழ் சட்ட நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.