பதவியில் இருந்து மாற்றப்படுவாரா?மத்திய வங்கி ஆளுநர்

0
71

சிறிலங்காவின் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் விரைவில் ஆளுநர் பதவியில் இருந்து மாற்றப்படுவதற்கான வாய்ப்புக்கள் தென்படுவதாக தென்னிலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், நிதியமைச்சருக்கும் மத்திய வங்கி ஆளுநருக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக பொருளாதாரம் கையாளப்படும் விதம் குறித்து நிதியமைச்சருக்கும் மத்திய வங்கி ஆளுநருக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் காணப்படுவதை சுட்டிக்காட்டியுள்ள நிபுணர்கள் மத்திய வங்கி ஆளுநர் பதவியிலிருந்து விரைவில் கப்ரால் மாற்றப்படுவார் என்றும் நாணயசபையும் முற்றாக மாற்றப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களாக மத்திய வங்கி ஆளுநர் தனக்கும் நிதியமைச்சருக்கும் இடையிலான உறவுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களை தயக்கத்துடன் நிராகரிக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

இதற்கிடையில் நிதியமைச்சு மத்திய வங்கியுடன் கலந்தாலோசிக்காமல் சர்வதேச நாணய நிதியம் மற்றும் அமெரிக்காவிற்கான சிறிலங்காவின் தூதரகம் ஆகியவற்றுடன் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளமையும் மத்திய வங்கியின் ஆளுநரின் எதிர்காலம் குறித்து வெளியாகும் தகவல்களை உறுதிப்படுத்தும் விதத்தில் காணப்படுவதாகவும் பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.