டொலர்கள்பற்றாக்குறை, பொருட்களின் விலை மேலும் உயரும்!

0
74

மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலை பதவியில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்று ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா இதனை கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்துக்குள் இன்று இரண்டு அல்லது மூன்று பிரிவுகள் செயற்படுவதாக குறிப்பிட்ட அவர், சர்வதேச நாணய நிதியத்தின் உயரதிகாரி இலங்கைக்கு வந்துள்ளநிலையில் அவர் மத்திய வங்கியின் ஆளுநரை சந்திக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டினார்.

இந்தநிலையில் அரசாங்கத்துடன் முரண்பாடு என்ற வகையில் அவர் எதிர்வரும் ஜூலை மாதமளவில் பதவியில் இருந்து நீக்கப்படலாம் என்று ஹர்ச குறிப்பிட்டார்.

இலங்கைக்கு வந்திருந்த சர்வதேச நாணய நிதியத்தின் உயரதிகாரி, நேற்று ஜனாதிபதியை சந்தித்தபோது, 2019ஆம் முதல் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கான காரணங்களை விளக்கியுள்ளார் என்று ஹர்ச தெரிவித்தார்.

அதில்-

1- 2020ஆம் ஆண்டு அரசாங்கம் பதவிக்கு வந்ததும் அறிவித்த வரிச்சலுகை காரணமாக அரசாங்கத்துக்கு 500 மில்லியன் ரூபா நட்டமேற்பட்டது,

2-இலங்கைக்கான சர்வதேச நாணய சந்தை மூடப்பட்டுள்ளது.

3-வெளிநாட்டு நாணய ஒதுக்கலில் முறைமை இல்லை, பாதீட்டில் துண்டு விழும் தொகை அதிகம்,

4-நாடு தொடர்பில் நம்பிக்கை அற்றுப்போயுள்ளது.

5- பணவீக்கத்தை கட்டுப்படுத்தமுடியாத நிலை ஏற்பட்டுள்ளமையை நாணய நிதியத்தின் அதிகாரி சுட்டிக்காட்டியதாக ஹர்ச குறிப்பிட்டார்.

தற்போதைய பொருளாதார பிரச்சினைகளுக்கு மத்தியில் இலங்கையில் கடந்த வெள்ளக்கிழமை முதல் 1550 பில்லியன் ரூபா அச்சிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்

எனவே இந்தியாவில் இருந்து பெற்றுக்கொள்ளப்படும் ஒரு பில்லியன் டொலர்களால் மாத்திரம், பிரச்சினையை தீ்ர்க்கமுடியாது, நாட்டில் தொடர்ந்தும் பொருட்களின் விலை அதிகரிக்கவுள்ளது என்று ஹர்ச தெரிவித்தார்.

இதேவேளை இலங்கை தற்போதே திவாலாகிவிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு வாரங்களுக்கு கூட இறக்குமதி செய்யக்கூடிய அளவுக்கு இலங்கையில் டொலர்கள் இல்லை. குறிப்பாக கூறினால் டொலர்களே இல்லை என்று அவர் தெரிவித்தார்.

நாடு கடுமையான டொலர் பற்றாக்குறையில் இருக்கும்போது, இலங்கைக்கு பொருட்களை எடுத்து வந்துள்ள கப்பல்களுக்கு நாள் ஒன்றுக்கு 18ஆயிரம் டொலர் தாமதக்கட்டணங்கள் செலுத்தப்படுகின்றன.இதுவரை காலத்தில் இரண்டு கப்பல்களுக்கு 3லட்சத்துக்கு 60ஆயிரம் டொலர்கள் செலுத்தப்பட்டுள்ளதாக கபீர் ஹாசிம் குறிப்பிட்டார்.

ஐக்கிய மக்கள் சக்தி நேற்று கொழும்பில் நடத்திய மக்கள் போராட்டத்தில் கட்சி ஆதரவாளர்கள் மாத்திரமன்றி, பொதுஜன பெரமுனவின் ஆதரவாளா்கள் மற்றும் கடந்த தேர்தலில் அந்தக்கட்சிக்கு நிதியுதவி செய்தவர்களும் பங்கேற்றதாக அவர் கூறினார்.

நாட்டின் பொருளாதாரத்தை சீர்குழைத்த கோட்டாபய ராஜபக்சவுக்கு தொடர்ந்தும் நாட்டை நடத்திச்செல்லமுடியாது என்பதை வலியுறுத்தியே அவர்கள் நேற்று போராட்டத்தில் பங்கேற்றனர் என்று அவர் குறிப்பிட்டார்.

மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுடன் நடத்திய சந்திப்பின்போது, நாட்டை மீட்டெடுக்கும் திட்டங்கள், அரசாங்கத்திடம் இல்லை என்பது தெரியவந்ததாகவும் கபீர் ஹாசம் தெரிவித்தார்.

500 மில்லியன் டொலர்களுக்காக திருகோணமலை எரிபொருள் குதங்கள் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் பெற்றுக்கொள்ளப்படவுள்ள ஒரு பில்லியன் டொலர்களுக்காக அரசாங்கத்தினால் எவை வழங்கப்படபோகின்றன என்பதை எதிர்காலத்தில் பார்க்கமுடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை ஜனாதிபதி இன்றைய தமது உரையில் பதவி விலகப்போவதாக கூறவேண்டும்.

அல்லது நாட்டை கட்டியெழுப்ப தம்மிடம் உள்ள திட்டங்களை கூறவேண்டும் என்று கபீர் ஹாசிம் குறிப்பிட்டார்இதனை தவிர வேறு எதனையும் மக்கள் எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.மத்திய வங்கியின் பொருளாதார வரைப்படத்தில் கூறப்பட்டுள்ள எந்தவொரு விடயமும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்று செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரட்ன தெரிவித்தார்.

சீனாவின் நிறுவனம் ஒன்று இலங்கை ஜனாதிபதியிடம் மத்திய அதிவேக வீதி அமைப்பில் மோசடி இடம்பெற்றுள்ளதாக முறையிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்தநிலையில் இதுவரை இலங்கையில் தயாரிக்கப்படாத வகையில் புதிய பொருளாதாதரக் கொள்கையை விரைவில் வெளியிடவுள்ளதாக அவர் தெரிவித்தார்.