குப்பையில் அரசியல் தேடிய அமைச்சர்!மக்கள் கடும் விமர்சனம்

0
76

சமகால ஆட்சியிலுள்ள ராஜபக்ஷ சகோதர்கள் மீது சிங்கள மக்கள் மிகவும் வெறுப்படைந்து வருகின்றனர்.

இந்நிலையில் கொழும்பில் நேற்றையதினம் குப்பையில் அரசியல் தேடிய அமைச்சர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக சிங்கள மக்கள் கடும் விமர்சனத்தை வெளியிட்டுள்ளனர்.

அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நேற்றையதினம் எதிரணியினரால் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்ட எதிரணியினர் தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.

இந்நிலையில் ஆர்ப்பாட்டம் நிறைவடைந்த நிலையில், அந்தப் பகுதியில் வீசப்பட்டிருந்த குப்பைகளை சுத்தம் செய்யும் நடவடிக்கையை நாமல் ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் ஈடுபட்டிருப்பதனை போன்ற புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் தீவிரமாக பகிரப்பட்டன. 

இவ்வாறான செயற்பாடு ஒரு அரசியல் நாடகம் என சிங்கள மக்கள் தரப்பில் நேரடியாக விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.

மக்களின் அனுதாபத்தை பெற்றுக்கொள்ள நாமல் செய்யும் சிறுபிள்ளைத்தனமான செயல் இதுவென பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து வெளியிட்டு வருகின்றனர். 

எனினும் குறித்த புகைப்படங்கள் பகிரப்பட்டு சில மணித்தியாலங்களில் அனைத்து சமூக வலைத்தளங்களிலிருந்தும் அந்தப் புகைப்படங்கள் நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

எனினும் இந்தப் புகைப்படங்களை அமைச்சர் தனது முகப்புத்தக பக்கத்தில் வெளியிடாத நிலையில் அதனை சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை. எனினும் சிங்கள மக்கள் மத்தியில் மிகவும் பிரபல்யம் அடைந்த ராஜபக்ஷ குடும்பத்தின் புகழ், தற்போது படிப்படியாக குறைந்து வருவதை வெளிக்காட்டுவதாகவே மக்களின் தற்போதைய மனநிலை உள்ளமை இங்கு சுட்டிக்காட்டப்படுகிறது.