வறிய நிலையிலுள்ள மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் விநியோகம்!!

0
453

சுவிஸ் ஆதாரம் அமைப்பின் அனுசரணையுடன் பெற்றோரை இழந்த மிகவும் வறிய நிலையிலுள்ள மாணவர்களுக்கு தமது அமைப்பு பாடசாலை உபகரணங்களையும் கற்றல் நடவடிக்கைக்குத் தேவையான இன்ன பிற பொருட்களையும் விநியோகித்து வருவதாக அக்னி சமூக மேம்பாட்டு மன்றத்தின் தலைவர் எஸ். ரகுபரன் தெரிவித்தார்.

அந்த வகையில் ஏறாவூர்ப் பற்றுப் பிரதேசத்தின் ஐயங்கேணி கிராமத்திலுள்ள பாடசாலை மாணவர்கள் 21 பேருக்கு ஒரு தொகுதி பாடசாலை உபகரணங்களும் கற்றலுக்கான உசாத்துணைப் பொருட்களும், கொரோனா வைரஸ் தடுப்பு முகக் கவசங்களும் திங்கட்கிழமை 01.02.2021 வழங்கி வைக்கப்பட்டன.

அக்னி சமூக மேம்பாட்டு மன்றத்தின் தலைவர் ரகுபரனின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்தின் விளையாட்டு உத்தியோகத்தர் கே. சங்கீதா பாடசாலை ஆசிரியிர் பி. பிரசாந்தன் உட்பட பயனாளிகளான வறிய நிலை மாணவர்களும் கலந்து கொண்டனர்.

கற்றலுக்காக தக்க தருணத்தில் கிடைத்த கற்றல் உபகரணங்களும் இன்னபிற கற்றலுக்கான பொருட்களும் தமக்கு பேருதவியாக அமைந்திருந்ததாக பொருட்களைப் பெற்றுக் கொண்ட பயனாளிகளான மாணவர்கள் தெரிவித்தனர்.

இந்த உதவிப் பொருட்கள் விநியோகம் இத்தோடு மூன்றாம் கட்டமாக இடம்பெறுவதாக அக்னி சமூக மேம்பாட்டு மன்றத்தின் தலைவர் ரகுபரன் மேலும் தெரிவித்தார்.