சுவிட்சர்லாந்தில் வகுப்பறையில் சாப்பிட்ட ஆசிரியருக்கு கொரோனா: தனிமைப்படுத்தப்பட்ட 22 குழந்தைகள்

0
438

சுவிட்சர்லாந்தில் வகுப்பறைக்குள் வைத்து சாப்பிட்ட சிறார் பாடசாலை ஆசிரியருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது 22 குழந்தைகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

சுவிட்சர்லாந்தின் St. Gallen மண்டலத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் சிறார்கள் 22 பேர்களே எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம் அவர்களின் ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சம்பவத்திற்கும் இரண்டு நாட்கள் முன்னர், குறித்த ஆசிரியர் வகுப்பறைக்குள் வைத்து உணவருந்தியதாக கூறப்படுகிறது.

கண்டிப்பாக இதுபோன்ற செயல்களை தடுத்திருக்க முடியும் என குறிப்பிட்டுள்ள மண்டல சுகாதார நிர்வாகிகள், மாணவர்கள் முன்னிலையில் மாஸ்க் அப்புறப்படுத்துவது முறையான நடவடிக்கை அல்ல எனவும் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே சூரிச் மண்டலத்தில் நான்காவது வகுப்பு மாணவர்கள் முதல் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் St. Gallen மண்டலத்தில் இரு ஆசிரியர்களுக்கு உருமாற்றம் கண்ட கோரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்கள் பாடம் நடத்திய மாணவர்கள் அனைவரும் தற்போது தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

மட்டுமின்றி பாடசாலையில் உள்ள மொத்த பேரும் பரிசோதனைக்கும் உட்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கான பரிசோதனை முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியாகும் என தெரிய வந்துள்ளது.