கொழும்பு விகாரைகளில் இந்து சமய அடையாளங்கள்! வெளிவரும் உண்மைத் தகவல்கள்

0
544

கொழும்பு நகரின் வடகிழக்கில் சுமார் 8 கி.மீ. தொலைவில் களனிய அமைந்துள்ளது. கொழும்பு-கண்டி வீதியிலிருந்து சுமார் 4 கி.மீ. தூரத்தில் களனி கங்கையில் வட கரையில் பிரசித்தி பெற்ற களனி விஹாரை அமைந்துள்ளது, இதன் அருகில் விபீஷணன் கோயில் உள்ளது.

புத்த பகவான் இலங்கைக்கு மூன்று தடவைகள் வந்ததாகவும், அப்போது இங்குள்ள 16 இடங்களுக்குச் சென்று பெளத்த நெறியைப் போதித்ததாகவும் மகாவம்சம் கூறுகிறது. அந்த 16 இடங்களில் களனியும் ஒன்றாகும், சிவ வழிபாடு நிலவிய 16 இடங்கள்.

இலங்கையில் பல இடங்கள் இருக்கும் போது மேற்சொன்ன 16 இடங்களுக்கு மட்டும் புத்த பகவான் வந்து பெளத்த நெறியைப் போதித்ததாக மகாவம்சம் குறிப்பிடுவது ஏன் என ஆராய்ந்த போது ஓர் உண்மை புலப்பட்டது.

இந்த 16 இடங்களும் பெளத்தம் இலங்கையில் அறிமுகம் ஆவதற்கு முன்பு சிவ வழிபாடு மிகவும் செல்வாக்குடன் மேலோங்கிக் காணப்பட்ட இடங்களாகும்.

இப்படிப்பட்ட இடங்களில் பெளத்த நெறியைப் போதிப்பதன் மூலம் முழு இலங்கையிலும் இந்நெறியை வேகமாகப் பரப்பலாம் எனும் எண்ணத்திலேயே இந்த 16 இடங்களும் இலக்கு வைக்கப்பட்டன.

எனவே தான் களனி விகாரையை ஆராய வேண்டும் எனும் எண்ணம் ஏற்பட்டது. அந்த வகையில் சில வருடங்களுக்கு முன்பு தென்னிலங்கையில் உள்ள கோயில்கள் பற்றி நான் ஆராய்ந்த போது களனி விகாரைக்குச் சென்று அங்குள்ள சுவடுகளை ஆராய்ந்தேன், அப்போது இதுவரை தெரியாத பல ஆச்சரியமான விடயங்கள் கிடைத்தன.

இராமர் காலத்தில் களனியில் குருகுலம்.

பொ.ஆ.மு. 5000 காலப்பகுதியில் விபீஷணன் இலங்கையை ஆட்சி செய்து வந்தான். இலங்கையை விபீஷணன் கையில் ஒப்படைத்து விட்டு நாடு திரும்பிய ராமர் அங்கு குருநாடு என்னுமிடத்திலிருந்து ஒரு இளவரசனையும், இளவரசியையும், உயர்குடி மக்களையும், பிராமண புரோகிதர்களையும் இலங்கைக்கு அனுப்பி வைத்தார் எனவும், இலங்கையில் இவர்கள் தங்கியிருந்த இடம் குருநாடு என்ற பெயரைப் பெற்றிருந்ததாகவும் நூல்கள் மூலம் அறியக் கூடியதாக உள்ளது.

இவர்கள் இங்கு ஓர் குருகுலத்தை அமைத்து நிர்வகித்து வந்ததாகவும், குருகுலம் அமைந்திருந்த இடமே தற்போது ‘குருகுலாவ’ என்றழைக்கப் படும் இடம் எனவும் கூறப்படுகிறது. இந்த ‘குருகுலாவ’ என்னுமிடம் ராகமைக்கு அருகில் உள்ளது.

கடற்கோளினால் அழிந்து போன கல்யாணி இராச்சியம்.

இன்று களனிய என்றழைக்கப்படும் இப்பிரதேசம் மிகப் புராதன காலத்தில் கல்யாணி என்ற பெயரைப் பெற்று விளங்கியது. தற்போது உள்ள களனியாவின் மேற்கில் சுமார் 9 மைல் தொலைவில் இவ்விராச்சியம் அமைந்திருந்தது. பொ.ஆ.மு. 200 ஆம் ஆண்டளவில் ஏற்பட்ட கடற்கோளின் கோரத்தினால் இவ்விராச்சியம் அழிந்து போனது. கல்யாணி இராச்சியத்திலிருந்த 970 மீனவக் கிராமங்களும், 400 முத்துக் குளிப்போர் கிராமங்களும் கடலில் அமிழ்ந்து போயின என இராஜாவலிய கூறுகிறது.

மூன்றாவது தடவையாக ஏற்பட்டதாகக் கருதப்படும் இக்கடற்கோளில் இலங்கையின் நிலப்பரப்பின் பன்னிரெண்டில் பதினொரு பகுதியை கடல் காவுகொண்டு விட்டதாகத் தெரியவருகிறது.

கல்யாணி இராஜதானியில் சிவ வழிபாடு.

பௌத்தம் இலங்கைக்கு வருமுன் இப்பகுதியில் யக்‌ஷ வழிபாடு மேலோங்கியிருந்தது. இவ்வழிபாட்டுத் தெய்வங்கள் சிவனை ஒத்ததாகக் காணப்பட்டன. மகேஜ, புரதேவ, வியாததேவ போன்ற யக்‌ஷ தெய்வங்களின் வழிபாடு இங்கு செல்வாக்குப் பெற்றிருந்தது. “மகேஜ” என்பது “மகேசன்” எனும் சிவனைக் குறிப்பதாகும். இது பாளி மொழியில் மகேஜ எனப்பட்டது. “புரதேவ” என்பது “நகரத்தினைக் காக்கும் தெய்வம்” எனப் பொருள்படும்.

நகரத்தின் கடவுள் “நகரீசர்” என்று சிவனைக் குறிப்பதாகும். ”வியாத தேவ“ என்பது தென்னிந்தியாவின் பூர்வீகக் குடிகளின் மலைத் தெய்வமாகும். சிவன் கூட ஒரு மலைத் தெய்வமே. “வியாதிதேவ” என்றால் நோய்களிலிருந்து காப்பாற்றும் வைத்திய நாத மூர்த்தியாகும். இவ்வாறு பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி சிவவழிபாடே ஒரு சில மாற்றங்களுடன் யக்‌ஷ வழிபாடு என பாளி நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்தில் இலங்கை முழுவதும் சிவ வழிபாடு செல்வாக்குப் பெற்று விளங்கியமைக்கான பிராமி கல்வெட்டுக்கள் இலங்கையின் எல்லாப் பகுதிகளிலும் கிடைக்கப் பெற்றுள்ளன.

இவ்வாறான சுமார் 80 கல்வெட்டுக்கள் சிவன் தொடர்பாக இலங்கையில் கிடைத்துள்ளன. இதே காலப்பகுதியில் கல்யாணி உபராஜதானியிலும் சிவ வழிபாடு செல்வாக்குப் பெற்றிருந்தது என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

நாகலிங்கக் கோயில்கள்

இதுவே இப்பகுதியில் இந்து சமயம் தமிழர் செல்வாக்கு சம்பந்தமாக எமக்குக் கிடைக்கும் மிகப்பழைய தகவலாகும். மணியக்கிரன் எனும் நாக மன்னன் கல்யாணியை ஆட்சி செய்த காலத்தில் இப்பகுதியில் சைவம் தழைத்தோங்கியிருந்தது.

நாக மன்னனான சிவன் காலத்திலும் இப்பகுதியில் நாகலிங்கக் கோயில்கள் இருந்ததாக நம்பப்படுகிறது. பௌத்த சமயம் இலங்கைக்கு வருவதற்கு முன்பு இங்கு இந்து சமயம் மட்டுமே நிலைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கல்யாணியில் சிவன் எனும் சிற்றரசன்.

பொ.ஆ.மு. 2 ஆம் நூற்றாண்டில் தமிழ் சிற்றரசர்கள் கல்யாணிப் பகுதியை ஆட்சி செய்து வந்துள்ளனர். சிவன் என்ற பெயரை உடைய சிற்றரசன் இப்பகுதியை ஆட்சி செய்ததாக தாதுவம்சம் கூறுகிறது. சைவ மன்னனான சிவனின் ஆட்சியில் இப்பகுதியில் சிவ வழிபாடு செல்வாக்குப் பெற்றிருக்க வேண்டும் எனவும் நம்பப் படுகிறது.

என். கே. எஸ். திருச்செல்வம்.

வரலாற்று ஆய்வாளர்

இலங்கை