காணாமல்போனவர்கள் எனத் தெரிவிக்கப்படுவோர் யுத்தத்தின் போது வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்றிருக்கலாம்; புதிய ஆணைக்குழு உண்மையான எண்ணிக்கையைக் கண்டுபிடிக்க முயலும்- வெளிவிவகார அமைச்சின் செயலாளர்

0
624

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நியமித்துள்ள புதிய ஜனாதிபதி ஆணைக்குழு இலங்கையில் யுத்தம் இடம்பெற்றவேளை காணாமல் போனவர்கள் எத்தனை பேர் என்ற உண்மையை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளது.

இதேவேளை காணாமல்போனவர்கள் குறித்த புள்ளிவிபரங்கள் மிகைப்படுத்தப்பட்டவை என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் தெரிவித்தார் என மோர்னிங் செய்தி வெளியிட்டுள்ளது.

சில வெளிநாட்டு அரசியல்வாதிகள் 40.000 காணாமல் போயுள்ளனர் என தெரிவிக்கின்றனர் என குறிப்பிட்டுள்ள வெளிவிவகார அமைச்சின் செயலாளர் இது பெருமளவிற்கு மிகைப்படுத்தப்பட்ட புள்ளிவிபரம் என தெரிவித்துள்ள அவர் ஐக்கியநாடுகளின் அறிக்கைகளும் ஒன்றுக்கொன்று முரணாக உள்ளன சில அறிக்கைகள் 7000 என தெரிவிக்கின்றன சில அறிக்கைகள் 70000 என தெரிவிக்கின்றன என அவர் தெரிவித்துள்ளார். காணாமல்போனவர்கள் குறித்த துல்லியமான புள்ளிவிபரத்தை கண்டறிவதும் புதிய ஆணைக்குழுவின் நோக்கம் என அவர் தெரிவித்துள்ளார்.

யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளை காணப்பட்ட குழப்பநிலையை பயன்படுத்தி பலர் படகுகள் மூலம் வெளிநாடுகளிற்கு தப்பிச்சென்றிருக்கலாம்,அவர்கள் அங்கு புதிய அடையாளங்களுடன் அங்கு வாழக்கூடும் எனவும் தெரிவித்துள்ளார்.