கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு

0
560

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்காக அபாரமாக பந்து வீசிய தமிழகத்தைச் சேர்ந்த இடக்கை வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் அதில் 16 விக்கெட்டுகளுடன், 71 யார்க்கர்களும் போட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதன் தொடர்ச்சியாக ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணிக்கு வலைபயிற்சி பவுலராக தேர்வு செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்டார்.

வீரர்களின் அடுத்தடுத்த காயம் காரணமாக இந்திய அணியில் கூடுதலாக சேர்க்கப்பட்ட அவர் கடைசியாக இந்திய அணியிலும் கால்பதிக்கும் அதிர்ஷ்டத்தை பெற்றார். மூன்று வடிவிலான போட்டிகளிலும் (டெஸ்ட், ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டி) ஒரே தொடரில் அறிமுகம் ஆன முதல் இந்திய வீரர் என்ற மகத்தான சிறப்பை பெற்ற 29 வயதான நடராஜன் ஆஸ்திரேலிய பயணத்தில் மொத்தம் 11 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தி விட்டார்.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய பயணத்தை முடித்துக் கொண்டு தாயகம் திரும்பிய அவர் பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து காரில் சொந்த ஊரான சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள சின்னப்பம்பட்டிக்கு நேற்று மாலை சென்றார். அங்கு அவரது கிரிக்கெட் அகாடமி நிர்வாகிகள், குடும்பத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக செண்டை மேளதாளங்கள் முழங்கவும், வாண வேடிக்கையுடனும், உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

காரில் இருந்து இறங்கிய நடராஜன், அங்கு ஏற்கனவே தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் அழைத்து செல்லப்பட்டார்.

கொரோனா தடுப்பு விதிமுறைகளின் 14 நாட்கள் வீட்டில் தனிஅறையில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும், பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக் கூடாது, வெளிநபர்களை சந்திக்கக்கூடாது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் அவரை அறிவுறுத்தியுள்ளனர். நடராஜன் குடும்பத்தினருடன் நெருக்கத்தை தவிர்த்துக் கொண்டார்.