நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் மாவட்ட நிர்வாகம் மும்முரம்! – மாவட்ட ஆட்சித் தலைவர் ரோகிணி!

0
563
District administration busy removal watersheds - District Collector Rohini

சேலம் மாநகரில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 185 ஹெக்டேர் பரப்பளவில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றியுள்ளதாகக் கூறிய மாவட்ட ஆட்சியர் ரோகிணி, ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் பாரபட்சமின்றி தொடரும் என தெரிவித்துள்ளார்.District administration busy removal watersheds – District Collector Rohini

சேலத்தில் உள்ள குளங்கள், ஓடைகள் ஆகியவற்றை ஆக்கிரமித்து 50க்கும் மேற்பட்ட வீடுகள், கடைகள், உணவகங்கள் கட்டப்பட்டிருந்தன.

இதனால் மழைநீர் வெளியேற வழியின்றி குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தும் நிலை பல ஆண்டுகளாக நீடித்து வந்தது.

ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடக்கோரி, நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர்கள் வழக்குத் தொடர்ந்த நிலையில், நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கிடையே வடகிழக்குப் பருவ மழையை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சித் தலைவர் ரோகிணி தலைமையில் நடைபெற்றது.

அதில் ஆக்கிரமிப்புக்குள்ளான நீர்நிலைகள்,ஆக்கிரமிப்பாளர்களின் விவரங்கள், ஆக்கிரமிப்புகளால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் ஆகியவை குறித்து ஆட்சியரிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஆட்சியர் ரோகிணி உத்தரவிட்டார்.

இதையடுத்து நடவடிக்கைகளை தீவிரப்படுத்திய அதிகாரிகள், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டனர்.

கடந்த வாரத்தில் நடைபெற்ற ஆக்கிரமிப்பு பணிகளில் சேலம் கோனேரிக்கரை ஏரி, நகரிலுள்ள ஓடைகள், ஆத்தூர் வசிஷ்ட நதிக்கரை, கந்தம்பட்டி, புதிய பேருந்து நிலையம், பழையபேருந்து நிலையம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்த ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றினர்.

போலிசாரின் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த வீடுகள், கடைகள், உணவகங்கள், விடுதிகள், ஆகியவை பலத்த எதிர்ப்புகளுக்கிடையே இடித்து அகற்றப்பட்டன.

ஆக்கிரமிப்பின் பிடியில் முழுவதுமாக சிக்கியுள்ள மூக்கனேரி பகுதியில் இருந்து வரும் ஓடை, MTS நகர் ஓடை, ராமகிருஷ்ண சாலை பகுதியிலுள்ள ஓடை உள்ளிட்டவற்றையும் மீட்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் ரோகிணி, நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருக்கும் வணிக ரீதியான கட்டிடங்கள் பாரபட்சமின்றி இடித்துத் தள்ளப்படும் என்று கூறினார். அதேசமயம் அங்கு வீடுகள் கட்டியிருந்தவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.

மாவட்ட நிர்வாகத்தின் இந்த அதிரடி நடவடிக்கை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இனிவரும் காலங்களில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் நடைபெறா வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :