துணைவேந்தர் நியமனத்தில் ஊழல்! – நடவடிக்கை கோரும் பாமக!

0
449
Corruption Vice-Chancellor's appointment - Mamta demanding action

பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர்கல்வித்துறையில் நடைபெற்ற ஊழல்கள் குறித்தும் விரிவான விசாரணை நடத்த ஆளுனர் ஆணையிட வேண்டும் என பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.Corruption Vice-Chancellor’s appointment – Mamta demanding action

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது :

“தமிழ்நாட்டில் அரசு பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிப்பதில் மிகப்பெரிய அளவில் ஊழல்கள் நடைபெற்றதாக தமிழக ஆளுனரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான பன்வாரிலால் புரோகித் கூறியிருக்கிறார். உயர்கல்வித்துறையை ஊழல் என்ற கொடிய நோய் சிதைத்து வருவதை ஆளுனர் வெளிப்படையாக ஒப்புக்கொண்டது ஆக்கப்பூர்வமான திருப்பமாகும்; இது வரவேற்கத்தக்கது.

சென்னை தியாகராய நகரில் இன்று காலை நடைபெற்ற உயர்கல்வி குறித்த கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசிய ஆளுனர் பன்வாரிலால் புரோகித்,‘‘தமிழகத்தில் துணைவேந்தர் பதவிகள் கோடிக்கணக்கில் பணம் கொடுத்து வாங்கப்பட்டதை ஆளுனராக பதவியேற்ற பின்னர் நான் அறிந்து கொண்டேன். பல கோடி பணம் பரிமாற்றம் செய்யப்பட்டு தான் துணைவேந்தர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. ஆரம்பத்தில் இதை நான் நம்பவில்லை. பின்னர் அது உறுதியானவுடன் நான் மிகவும் வருத்தமடைந்தேன்.அதன்படி 9 துணை வேந்தர்களை தகுதியின் அடிப்படையில் நியமனம் செய்தேன்’’ என்று தெரிவித்திருக்கிறார்.

ஆளுனரின் இந்த குற்றச்சாற்றுகள் அனைத்தும் உண்மை. தமிழகத்தில் கடந்த 15 ஆண்டுகளாக உயர்கல்வித்துறை சீரழிந்து வருகிறது. துணைவேந்தர் பதவியில் தொடங்கி உதவிப் பேராசிரியர் பணி வரை அனைத்து பணியிடங்களும் விலை நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. துணைவேந்தர் பதவி ரூ.5 கோடி முதல் ரூ.60 கோடி வரை விற்பனை செய்யப்படுவதை பாட்டாளி மக்கள் கட்சி ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தி வந்தது. மதுரை காமராசர் பல்கலைக்கழக துணை வேந்தராக தகுதியே இல்லாத செல்லத்துரை நியமிக்கப்பட்டதையும், பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் பதவியை கணபதி பணம் கொடுத்து கைப்பற்றியதையும் பா.ம.க. தான் அம்பலப்படுத்தியது. பா.ம.க.வின் குற்றச்சாட்டு உண்மை என்பதை நிரூபிக்கும் வகையில் காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரை சென்னை உயர்நீதிமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கணபதி கையூட்டு வாங்கியதாக கைது செய்யப்பட்டு நீக்கப்பட்டார்.

துணைவேந்தர் நியமனங்களில் ஊழல் நடந்துள்ளது உண்மை என ஆளுனர் ஒப்புக்கொண்டுள்ள நிலையில். நடந்த தவறை சரி செய்யவும், அந்த தவறுக்கு காரணமானவர்களை தண்டிக்கவும் ஆளுனர் என்ன செய்தார்? என்பது தான் பா.ம.க. எழுப்பும் வினா ஆகும். இப்போதுள்ள துணைவேந்தர்களில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் துணை வேந்தர் பாஸ்கரன் முந்தைய ஆளுனரின் சொந்த மாநிலத்தை சேர்ந்தவர் என்ற காரணத்துக்காக நியமிக்கப்பட்டவர். திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தர் முருகன், அன்னை தெரசா பல்கலைக் கழக துணைவேந்தர் வள்ளி, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கரன், கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் தங்கசாமி உள்ளிட்ட இப்போது பதவியிலுள்ள 8 பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள் அப்பதவிக்கு தகுதியற்றவர்கள்; கோடிக்கணக்கில் பணம் கொடுத்து தான் அப்பதவியைக் கைப்பற்றினர்.

மேற்கண்ட 8 பேரும் துணைவேந்தர்களாக பதவியேற்ற பின்னர் அவர்களின் ஆளுகைக்குட்பட்ட பல்கலைக்கழகங்களில் மிகப்பெரிய அளவில் ஊழல் செய்தார்கள் என்றும் பா.ம.க. குற்றஞ்சாற்றியது. கடந்த ஆண்டு திசம்பர் மாதம் ஆளுனர் பன்வாரிலால் புரோகித்திடம் எனது தலைமையிலான குழு அளித்த 24 குற்றச்சாட்டுகள் அடங்கிய புகார் மனுவில் 3 குற்றச்சாட்டுகள் பல்கலைக்கழக ஊழல்கள் தொடர்பானவை ஆகும். பல்கலைக்கழக ஊழல்களை களைய வேண்டும்; பல்கலைக்கழக நிர்வாகத்தை சீரமைக்க வேண்டும் என்ற அக்கறை ஆளுனருக்கு உண்மையாகவே இருந்திருந்தால், பல்கலைக்கழக ஊழல்கள் குறித்த குற்றச்சாட்டுகளின் மீது கடந்த 10 மாதங்களாக நடவடிக்கை எடுக்காதது ஏன்?

துணைவேந்தர் நியமனங்களில் ஊழல் நடந்ததை கண்டுபிடிப்பது மட்டும் போதுமானதல்ல. நடந்த தவறுக்கு காரணமானவர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டியதும் ஆளுனரின் கடமை ஆகும். பல்கலைக்கழக வேந்தராக ஆளுனர் இருந்தாலும், தேர்வுக்குழுவை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு துணைவேந்தர் நியமனத்தில் ஆதிக்கம் செலுத்துவது பல்கலைக்கழக இணைவேந்தர்களாக உள்ள உயர்கல்வித்துறை அமைச்சர்கள் தான். உயர்கல்வித்துறை அமைச்சர்களாக கடந்த காலங்களில் இருந்தவர்களும், இப்போது இருப்பவரும் துணைவேந்தர்கள் நியமனத்தில் கோடிக்கணக்கில் ஊழல் செய்தனர் என்பதை விசாரணை நடத்தினால் கண்டுபிடிக்கலாம்.

தமிழக பல்கலைக்கழகங்களில் பேராசிரியர், இணைப் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் நியமனத்தில் இப்போதும் ஊழல் நடைபெற்று வருகிறது. இதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. துணைவேந்தர்கள் முதல் உதவிப் பேராசிரியர் நியமனம் வரை ஒவ்வொரு நிலையிலும் நடைபெற்ற ஊழல்கள் குறித்து விசாரணை நடத்தி தவறு செய்தவர்களை தண்டிக்க வேண்டியது ஆளுனரின் கடமை ஆகும். அந்தக் கடமையை செய்ய ஆளுனர் தவறக்கூடாது.

எனவே, பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர்கல்வித்துறையில் நடைபெற்ற அனைத்து வகையான ஊழல்கள் குறித்தும் விரிவான விசாரணை நடத்த தமிழக ஆளுனர் உடனடியாக ஆணையிட வேண்டும். அதுமட்டுமின்றி, தமிழக உயர்கல்வி அமைச்சரை ஆளுனர் உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்.” என குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :