தமிழகத்திற்கு ரெட் அலர்ட்..! ஆனால் முதல்வர் தேர்தல் வேலையில் பிஸி! – ஸ்டாலின்!

0
569
red alert tamilnadu cm busy election job - stalin indioa tamil news

தற்போதைய நிலையில், முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்துவது, வானிலை ஆராய்ச்சி மையத்தின் எச்சரிக்கையை கையாளும் பொறுப்பினை தட்டிக் கழித்து விட்டதை உணர்த்துகிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.red alert tamilnadu cm busy election job – stalin indioa tamil news

இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது :

தமிழகத்தில் “மிக அதிகமான” வடகிழக்குப் பருவமழை பெய்யும் என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் 24.4 சென்டி மீட்டருக்கு மேலாக மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் “ரெட்” அலர்ட் விடுத்துள்ள நிலையில், முதலமைச்சர் எடப்பாடி திரு பழனிசாமியும், துணை முதலமைச்சரும் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் பணிகள் குறித்து மதுரையில் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடத்தியிருப்பது, வானிலை ஆராய்ச்சி மையத்தின் எச்சரிக்கையை கையாளும் பொறுப்பினை தட்டிக் கழித்து விட்டு, கட்சி வேலையைப் பார்க்கப் போய் விட்டதை உணர்த்துகிறது.

இப்படி பொறுப்பற்ற வகையில் அ.தி.மு.க ஆட்சியில் இருந்த முதல்வர்கள் அனைவரும் செயல்பட்டதால் தான் “சுனாமி”, டிசம்பர்(2015) பெரு வெள்ளம்” “வர்தா புயல்” “ஓகி புயல்” என்று பல்வேறு இயற்கை பேரிடர்களில் தமிழ்நாட்டு மக்கள் சிக்கி, சொல்லொனாத் துயரத்திற்கும், உயிர் சேதங்களுக்கும், பொருள் சேதங்களுக்கும் உள்ளாக நேரிட்டது.

இயற்கைப் பேரிடரை கையாள்வதில் அ.தி.மு.க அரசுக்கு இருந்த அலட்சியத்தை மத்திய தணிக்கை அறிக்கையே சுட்டிக்காட்டிய பிறகும், முதலமைச்சர் இந்த முறை ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில் கூட முதலில் “தேர்தல் வேலையை” கவனிக்க மதுரைக்குச் சென்று விட்டார் என்பது நிர்வாகத்தைப் பற்றியோ, மக்களின் நலன் குறித்தோ அவருக்கு கவலையில்லை என்பதை வெளிப்படுத்துகிறது.

சென்னை மாநகராட்சியின் சார்பில் வடகிழக்குப் பருவமழை தொடர்பாக 18.09.2018ல் ஒரு ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியிருக்கிறார்கள்.

அந்தக் கூட்டத்தில் மழை நீர் வடிகால்வாய்களை தூர்வாரும் பணி, ஆகாயத் தாமரை அகற்றுதல், வண்டல் மண் அகற்றுதல் போன்ற பணிகள் 60 கோடி ரூபாய் அளவில் “துவங்கப்பட்டுள்ளதாக” கூறப்பட்டுள்ளது. ரெட் அலர்ட் அக்டோபர் 4 ஆம் தேதி வெளியிடப்படுகிறது.

இதுதொடர்பான முன்னேற்பாடுகள் 15 நாட்களுக்கு முன்புதான் துவங்கியிருக்கிறது. அது இன்னும் முடியவில்லை என்பது இந்த ஆலோசனைக் கூட்ட பத்திரிக்கை குறிப்பில் இருந்து தெரிந்துகொள்ள முடிகிறது. உள்ளாட்சி நிர்வாகம் இந்த அ.தி.மு.க அரசில் மிக மோசமான நிர்வாக சீர்கேட்டில் சிக்கித் தவிக்கிறது!

1894 கிலோ மீட்டர் வரை நீளமுள்ள மழை நீர் கால்வாய்களை தூர்வாரும் பணியோ, 30க்கும் மேற்பட்ட பெரிய கால்வாய்களை தூர்வாரும் பணியோ குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு முன்பு துவங்கியிருக்க வேண்டும்.

ஆனால் தூங்கிக் கொண்டிருக்கும் அ.தி.மு.க ஆட்சியில் சென்னை மாநகராட்சியின் செயல்பாடும் தூங்கிக் கொண்டிருக்கிறது என்பதால் அந்தப் பணிகளும் இன்னும் நிறைவடையவில்லை என்பதை இந்த ஆலோசனைக் கூட்டம் தெளிவுபடுத்துகிறது.

இதுமட்டுமின்றி, தமிழ்நாடு முழுவதுமே இதே மோசமான நிலைமைதான் நீடிக்கிறது என்பதில் சந்தேகமில்லை. வழக்கம்போல் “அறிவிப்புகள்” வெளிவருகிறதே தவிர, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இல்லை.

கடந்த இரு தினங்களாக பெய்து வரும் மிதமான மழைக்கே, சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் ஆங்காங்கே, பள்ளமும், படுகுழிகளுமாக காணப்படும் சாலைகளில் தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் அவதிக்கு ஆளாகும் நிலையே காணப்படுகிறது.

ஆனால், வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடுகளுக்கு “ரெட் அலர்ட்” விடுக்கப்பட்ட பிறகுதான் அரசு தயாராகிறது என்பது வெட்கக் கேடானது. கால்வாய்கள் முழுவதும் தூர்வாரும் பணிகள், மழைநீர் வடிகால்வாய்களில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அகற்றும் பணிகள், திறந்த வெளியில் இன்னும் ஆங்காங்கே கொட்டிக் கிடக்கும் குப்பைகள் போன்றவற்றை அகற்றும் பணி இதுவரை முடிவடையவில்லை.

ஆகவே தூர்வாரும் பணிகள், குப்பை அள்ளும் பணிகளை மேற்கொள்வதற்குரிய நடவடிக்கைகளை “போர்க்கால அடிப்படையில்” சென்னை மாநகராட்சி எடுக்க வேண்டும் என்றும், தமிழகம் முழுவதும் வெள்ளம் பாதிக்கும் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதே வேகத்தில் மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

வடகிழக்குப் பருவ மழையால் பாதிப்புகள் ஏற்படுமேயானால், ஆங்காங்கே திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகளும், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும், கழக செயல்வீரர்களும் சமூக ஆர்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு நிவாரண பணிகளிலும், நலத்திட்ட உதவிகளையும் வழங்கி, மக்களை காப்பாற்றும் அனைத்து நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :