“ஹைட்ரோகார்பன் பெயரில் கொள்ளைபோகும் காவிரி டெல்டா” – காரணம் இதுதான்!

0
734
hydrocarbon cavity delta delivers - reason india tamil news

சட்டப்பாடி, குடவாசல், ஆண்டிமடம், புவனகிரி, நன்னிலம் என்று ஹைட்ரோ கார்பன் அதிகமுள்ள இடங்கள் தொடர்ச்சியாக இருப்பதுதான் தமிழகத்தில் தொடர்ந்து மீத்தேன், ஷெல், ஹைட்ரோ கார்பன் எடுக்கப் பொதுத்துறை நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றன.hydrocarbon cavity delta delivers – reason india tamil news

ஆனால், இந்த இடங்கள் அனைத்தும் விவசாயப் பகுதிகளாக இருப்பதை எந்த நிறுவனங்களும் கண்டுகொள்வதில்லை.

“வளங்கள் எங்கெல்லாம் இருக்கிறதோ; அங்கெல்லாம் வளர்ச்சிகள் இருக்கும்” என்று சொல்லித்தான், பெட்ரோல், எண்ணெய், மீத்தேன் முதல் ஹைட்ரோகார்பன் வரை பூமியிலிருந்து எடுக்க பரப்புரை செய்யப்பட்டு மக்களின் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.

ஆனால் நிலங்களை நாட்டின் வளர்ச்சிக்காகக் கொடுத்த விவசாயிகளுக்கு இதுவரை எந்த வளர்ச்சியும் இல்லை என்பதுதான் உண்மை.

மீத்தேன், ஷெல், நிலக்கரி, ஹைட்ரோ கார்பன் என்ற பெயரில் இயற்கை வளங்கள் தொடர்ந்து சுரண்டப்படுவதைக் கண்டித்து, தமிழக மக்கள் கடந்த சில வருடங்களாகப் போராட்டத்தில் குதித்துவருகின்றனர்.

மக்களின் போராட்டத்தைக் கலைக்க, தமிழகத்தில் இனி, இதுபோன்ற திட்டங்களைச் செயல்படுத்த மாட்டோம் என்றும், நடைமுறையில் இருந்த திட்டங்களையும் திரும்பப் பெறுவதாக அரசு அறிவிக்கும்.

ஆனால், அதற்கடுத்த நாள்களில், வளங்களைக் கொள்ளையடிக்க மீண்டும் `பொதுத்துறை’ நிறுவனங்களுக்கு ஏலம் விடப்படும்.

கெயில், மீத்தேன் திட்டம், ஷெல் கேஸ், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களின் பெயரில் டெல்டா பகுதிகளில் விவசாய நிலங்களை அழித்துவந்ததாக இத்திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து கதிராமங்கலம், நெடுவாசல், நன்னிலம் உள்ளிட்டப் பகுதிகளில் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திட முடியாது.

“எங்கள் திட்டங்களுக்குத் தமிழகத்தில் மட்டும்தான் தடை வருகிறது” என்று ஓ.என்.ஜி.சி அதிகாரிகளே பேட்டி கொடுத்தனர்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து நெடுவாசலில் மக்கள் போராடிக்கொண்டிருந்தபோது, “ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்குத் தமிழக அரசு இனி அனுமதி வழங்காது” என்று 2017 மார்ச் மாதம் வாக்குறுதி கொடுத்தார், முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

இந்த நிலையில் விகடன் இணையதளம் 2017-ல் நடத்திய சர்வேயில், `விவசாய நிலங்களை அழித்து, மீத்தேன் உள்ளிட்டத் திட்டங்கள் தேவையில்லை’ என்று மக்கள் அதில் கருத்துத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

வேதாந்தாவுக்கு ஹைட்ரோ கார்பன் டெண்டர் :

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நடத்திவரும் `வேதாந்தா’ நிறுவனத்துக்குத் தமிழகத்தில் இரண்டு பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியிருக்கிறது.

இந்தியா முழுவதும் 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஒப்பந்தம் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் டெல்லியில் கடந்த 1-ம் தேதி கையெழுத்தானது.

“நில ஆய்வு செய்யப்படாத 59,282 சதுர கி.மீ. பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான டெண்டர் விடப்பட்டது.

இந்தியாவில் 13 மாநிலங்களில் மொத்தம் 55 இடங்களுக்கு 9 நிறுவனங்களால் 110 டெண்டர்கள் கோரப்பட்டன.

இதில், வேதாந்தா நிறுவனத்துக்கு 41 இடங்களும், இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு 9 இடங்களும், ஓ.என்.ஜி.சி-க்கு 2 இடங்களும், கெயில், பாரத் பெட்ரோ ரிசோர்ஸ், இந்துஸ்தான் ஆயில் எக்ஸ்ப்ளோரேஷன் கம்பெனிகள் எனப் பொதுத்துறை நிறுவனங்களுக்குத் தலா ஒரு இடமும் கிடைத்தது.

மொத்தம் உள்ள 55 இடங்களில் நிலப் பகுதியில் 46 இடங்களிலும், கடல் பகுதியில் 9 இடங்களிலும் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளன. இவற்றில் 3 இடங்கள் தமிழ் நாட்டில் உள்ளன.

காரைக்கால் முதல் விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களையொட்டிய ஆழம் குறைந்த கடல் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தா நிறுவனத்துக்கு 2 இடங்களும், ஓ.என்.ஜி.சி நிறுவனத்துக்குச் சிதம்பரத்தையொட்டிய நிலப்பகுதியில் ஓர் இடமும் கிடைத்துள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிறுவி, 22 ஆண்டுக்காலமாக அந்தப் பகுதி மக்களின் உடல்நலத்தையும் வாழ்வாதாரத்தையும் அழித்து வருகிற வேதாந்தா குழுமத்துக்கு, தமிழ்நாட்டில் இரு இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்து இருக்கிறது.

தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று கோரி விவசாயிகளும் தமிழக மக்களும் தொடர்ந்து போராடி வருகிற நிலையில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை வலிந்து செயல்படுத்த மத்திய பி.ஜே.பி. அரசு முனைந்திருப்பது தமிழ்நாட்டின்மீது உள்ள மோடி அரசின் வன்மத்தைப் பறை சாற்றுகிறது.

2018 ஜூலை 24-ல் மத்திய அரசு மீத்தேன், ஹைட்ரோ கார்பன், பாறை படிம எரிவாயு உள்ளிட்ட அனைத்துக்கும் சேர்த்து ஒற்றை அனுமதி வழங்குவதற்காகத் திரவ மற்றும் வாயு வடிவிலான அனைத்து எரிபொருள்களையும் பெட்ரோலியம் என்றே அழைக்கலாம் என்று அரசு ஆணை வெளியிட்டது.

அப்போதே வேதாந்தா நிறுவனம், தமிழகத்தில் காவிரி டெல்டாவில் இரு இடங்களில் ஹைட்ரோ கார்பன் ஆய்வைத் தொடங்க இருப்பதாக வெளிப்படையாகக் கூறியது” என்று ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, தன்னுடைய எதிர்ப்பைப் பதிவுசெய்தார்.

இதையடுத்து, தமிழகத்தில் உள்ள மற்ற கட்சியினரும் ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்த உண்மைத்தன்மையைத் தெரிந்துகொண்டு, ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

நிலங்களைக் கைப்பற்ற :

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகிலுள்ள கிராமங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காக, சில அதிகாரிகள் வந்து நிலத்தைப் பார்வையிட்டுச் சென்றிருப்பதாகவும், `ஹைட்ரோ கார்பன் திட்டம் வந்தால் நல்லது நடக்கும்’ என்று ஆசை வார்த்தைகள் கூறி விவசாயிகளிடம் நிலத்தைக் கைப்பற்ற முயற்சி நடந்துவருவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து, “தமிழக அரசு ஹைட்ரோ கார்பன் எடுக்க எந்தவோர் அனுமதியும் கொடுக்கக் கூடாது.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்த அனுமதிபெற்ற வேதாந்தா நிறுவனம் விவசாயிகளுக்குத் தண்ணீர் கிடைக்கும் வகையில் 1000 அடியில் ஆழ்குழாய்க் கிணறு அமைத்துத் தருவதாகக் கூறி ஆய்வு மேற்கொள்ள முயன்று வருகிறது. அதனையும் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.

விவசாயிகளின் எதிர்ப்பை மீறி ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்த எந்தவொரு நிறுவனத்தையும் தமிழகத்தில் காலடி வைக்க விடமாட்டோம்” என்று டெல்டா பகுதிகளில் விவசாய அமைப்பினர் போராட்டங்களை முன்னெடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

சமீபத்தில் திருவாரூர் சென்ற தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தைச் சந்தித்து, ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று மனு கொடுத்திருக்கின்றனர் விவசாய அமைப்பினர்.

“ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எடுக்கும்போது கடலில் எடுங்கள், ஏன் நிலத்தில் எடுக்கிறீர்கள் என்றனர்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கடலுக்கு அடியில் எடுக்கத்தான் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடலுக்கு அடியில் எடுக்கப்படுவதால் கவலைப்படத் தேவையில்லை. அது எந்தவிதத்திலும் நிலப்பரப்பைப் பாதிக்காது. எதிர்காலத்தில் எரிசக்தியின் தேவை அதிகமாக இருக்கிறது.

மற்ற மாநிலங்களில் இதை வளர்ச்சியாக எடுத்துக்கொள்ளும்போது தமிழகத்தில் மட்டும் கிளர்ச்சி செய்ய ஒரு வாய்ப்பு கிடைத்துவிட்டதாக எடுத்துக்கொள்வது தவறு.

மக்களுக்கு ஆபத்து வருவதாக இருந்தால் பி.ஜே.பி. கட்சி அனுமதிக்காது. மக்கள்மீது எங்களுக்கும் அக்கறை உள்ளது” என்கிறார் அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன்.

ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட இருக்கும் மன்னார்குடி பகுதிக்கும் கடலுக்குமான தூரம் அவருக்கும் தெரியாமல் இருக்காது.

ஹைட்ரோ கார்பன் :

பெட்ரோலிய அமைச்சகத்தின்கீழ் இயங்கிவருகிறது, ஹைட்ரோ கார்பன் இயக்குநரகம். இந்தியாவில் இதுவரை, மொத்தம் 225 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இதில் 116 எண்ணெய் வளமிக்க இடங்களும் 109 எரிவாயு எடுக்கும் இடங்களும் உள்ளன. இதை 22 இடங்களாகப் பிரித்துத் திட்டத்தைச் செயல்படுத்திவருகிறது ஹைட்ரோ கார்பன் இயக்குநரகம்.

இந்தியாவில் வண்டல்மண் பாறைகள் இருக்கும் இடங்களில் இருந்துதான் அதிக அளவில் பூமிக்கடியிலிருந்து மீத்தேன் உள்ளிட்டவை எடுக்கப்படுகின்றன.

இந்தியாவில் மட்டும் 3.14 மில்லியன் சதுர கி.மீ தூரத்துக்கு 26 இடங்களில் வண்டல்மண் பாறைகள் இருப்பதாக இயக்குநரகம் தெரிவிக்கிறது. இந்த வண்டல்மண் படுகை 4 விதமாகப் பிரிக்கப்பட்டது.

அதில் முதற்பகுதி – வணிகநோக்கில் பயன்படும் இடங்கள். இதில் காம்பே, மும்பை, ராஜஸ்தான், கிருஷ்ணா -கோதாவரி, காவிரிப் படுகை மற்றும் அஸ்ஸாம் ஆர்க்கான் பெல்ட். இரண்டாவது பகுதி ஹைட்ரோ கார்பன்களின் அளவை வைத்துப் பிரிக்கப்படுகிறது.

இதில் அதிக அளவில் வணிகத்துக்குப் பயன்படாத பகுதிகளை வைத்து அளவிடப்படுகிறது. இதில் கட்ச் வளைகுடா, வட கிழக்குக் கடற்கரைகள், அந்தமான், கேரளா, கொங்கன், லட்சத்தீவு உள்ளிட்டப் பகுதிகள் அடங்கும். மூன்றாவது, புவியியல் ரீதியாக ஹைட்ரோ கார்பன் இருக்கும் இடங்கள்.

இமாலயா, கங்கை நதிப்படுகை, விந்திய மலைத்தொடர் பகுதி, கொங்கன் பகுதி, பெங்கால் உள்ளிட்டப் பகுதிகள் இதில் வருகின்றன.

நிச்சயமற்ற சாத்தியங்கள் ஒன்றாக இருக்கும் பகுதிகள் நான்காவது பகுதியாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் கரீவா படுகை, சாத்பூரா-ரெவா- தாமோதர் படுகைகள், சட்டீஸ்கர், நர்மதா உள்ளிட்டப் பகுதிகள் அடங்கும்.

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் :

தமிழகம் இதில் முதல் பகுதியில் வருகிறது. அதாவது, வணிக லாபத்துக்காகப் பயன்படுத்தப்படும் இடமாகக் காவிரிப் பகுதி உள்ளது.

குறிப்பாக, தமிழகத்தின் டெல்டா பகுதிகள். 1950-களிலிருந்துதான் தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கப்படுகிறது.

1984-ல் தமிழகத்தில் பல இடங்களில் சிறிய அளவில் ஆழ்துளைக் கிணறுகள் மூலம் எரிவாயு எடுக்கப்பட்டது.

தமிழகத்தின் காவிரிப் படுகையில் 1.5 லட்சம் சதுர கி.மீ அளவுக்கு ஹைட்ரோ கார்பன் உள்ளது. இதில் 95 ஆயிரம் சதுர கி.மீ பரப்பளவுக்கு ஆழ்கடலில் ஹைட்ரோ கார்பன் உள்ளது.

மிகமிகப் பழைமையான வண்டல்மண் பாறைகள் இருக்கும் இடமாகக் கருதப்படும் காவிரிப் படுகையில், தடித்த மணற்கல் மற்றும் சிறிய சுண்ணாம்புகள் அதிக அளவில் இருக்கின்றன.

திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் நாகை மாவட்டங்களின் பூமிக்கு அடியில் பாறைப் பரப்பில் மீத்தேன் அதிக அளவில் இருப்பதுதான் காரணம்.

பூமிக்கும் கீழே 6 கி.மீ தூரத்துக்குத் துளைப்போட்டுப் பாறைகளை உடைத்து, நிலத்தடி நீரை வெளியேற்றி மீத்தேன் எடுக்கப்படும். அப்படி இருக்கையில் விவசாய நிலங்கள் முழுதும் பாதிக்கப்படும்.

30 ஆண்டுகள் தமிழகத்தில் மீத்தேன் எடுக்கப்பட்டால் அதன் மதிப்பு 7 லட்சம் கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

சுமார் 700 எம்.எம்.டி அளவுக்குக் காவிரிப் படுகையில் ஹைட்ரோ கார்பன் இருப்பதாக மத்திய ஹைட்ரோ கார்பன் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

இதில் 430 எம்.எம்.டி அளவுக்கு நிலப்பரப்பிலும் 270 எம்.எம்.டி அளவுக்குக் கடல் பகுதியிலும் உள்ளது.

சட்டப்பாடி, குடவாசல், ஆண்டிமடம், புவனகிரி, நன்னிலம் என்று ஹைட்ரோ கார்பன் அதிகமுள்ள இடங்கள் தொடர்ச்சியாக இருப்பதுதான் தமிழகத்தில் தொடர்ந்து மீத்தேன், ஷெல், ஹைட்ரோ கார்பன் எடுக்கப் பொதுத்துறை நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றன.

ஆனால், இந்த இடங்கள் அனைத்தும் விவசாயப் பகுதிகளாக இருப்பதை எந்த நிறுவனங்களும் கண்டுகொள்வதில்லை. ஆளும் அரசின் உதவியுடன் விவசாயிகளிடமிருந்து தொடர்ந்து நிலங்கள் வலுக்கட்டாயமாகப் பறிக்கப்படுகிறது.

நன்னிலம், கதிராமங்கலம் உள்ளிட்டப் பகுதிகளில் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து பெட்ரோல் எடுக்கும் முயற்சியின்போது, நிலத்தடி நீருடன் பெட்ரோலும் கலந்து வந்தது. நன்னிலம் பகுதியில் தொடர்ந்து பெட்ரோல் எடுத்துவருவதால், பல வருடங்களாக அந்தப் பகுதியில் மழையே இல்லை.

மேலும், அங்குள்ள மக்களுக்குத் தோல் சார்ந்த நோய்கள் அதிக அளவில் வருகிறதாகவும், கிட்னி சம்பந்தப்பட்ட கோளாறுகளும் வருவதாக நன்னிலம் மக்கள் தெரிவிக்கின்றனர்.

விவசாயத்தை மட்டுமே நம்பி இருந்த மக்கள் இன்று விவசாய நிலங்களை விற்க வேண்டி வருகிறது. “விவசாயத்தைச் சாகடித்து, எங்களின் நிலங்களைப் பிடுங்கி, தனியார் நிறுவனங்களிடம் கொடுத்தும், ஆண்டுக்கணக்கில் வளங்களை உறிஞ்சி எடுக்கவே இதுபோன்ற திட்டங்களை அரசு கொண்டுவருகிறது.

மழையும் இல்லாமல், நிலத்தடி நீரும் இல்லாமல் விவசாயத்தை எப்படிச் செய்வது” என்று விரக்தியுடன் பேசுகின்றனர் நன்னிலம் விவசாயிகள்.

வளங்களை அழித்துத்தான் வளர்ச்சியை ஏற்படுத்துவது உண்மையான வளர்ச்சி கிடையாது. அதை, ஒருபோதும் தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என்பதைக் கடந்த ஆண்டே போராட்டங்கள் வாயிலாக ஆளும் தரப்புக்குத் தெரிவித்தார்கள் தமிழக மக்கள்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :