திருப்பூரில் மரண சாலையாக மாறிய தேசிய நெடுஞ்சாலை!

0
448
Tirupur National Highway Name Dead Highway India Tamil News

திருப்பூர் மாநகரைக் கடந்து செல்லும் தேசிய நெடுஞ்சாலை முறையான திட்டமிட்ட வடிவமைப்பு இல்லாமல் அமைக்கப்பட்டதால் தற்போது செட்டிபாளையம் பகுதியில் மரணச் சாலையாக மாறியிருக்கிறது.Tirupur National Highway Name Dead Highway India Tamil News

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் இருந்து திருப்பூர் வழியாக தாராபுரம் சாலை அவிநாசிபாளையம் வரையுள்ள 31.80 கிலோமீட்டர் நீள சாலையை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றி விரிவுபடுத்தும் பணியை கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கினர்.

அதில் திருப்பூர் மாநகருக்குள் அவிநாசி சாலை, குமரன் சாலை, காமராஜர் சாலை, தாராபுரம் சாலை வழியாக கோவில்வழி வரை சாலையின் இருபுறங்களிலும் 9 மீட்டர் அகலத்திற்கு நில இருப்பினைப் பொறுத்து அகலப்படுத்தி மேம்பாடு செய்யப்படும் என்று திட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

மேலும், மாநகராட்சியின் மையப்பகுதியில் திருப்பூர் கோவில்வழி வரை தேவையான இடங்களில் மழைநீர் வடிகால் கட்டப்படும் என்றும் கூறியிருந்தனர்.

அதன்படி தேசிய நெடுஞ்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி இன்னும் முழுமையாக முற்றுப் பெறவில்லை.

எனினும் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் வழக்கம் போல் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே இருக்கும் வளைவு நெழிவான சாலை பகுதிகளில் வாகனப் போக்குவரத்து, விபத்து தவிர்ப்பு உள்ளிட்ட அம்சங்களைக் கணக்கில் கொண்டு உரிய திட்டமிடல் மேற்கொண்டிருக்க வேண்டும்.

ஆனால் தாராபுரம் சாலையில் செட்டிபாளையம் பகுதியில் ஏற்கெனவே இருந்த சாலை குறுகிய அகலம் கொண்டதாக “எஸ்” வடிவ வளைவாக அமைந்திருந்தது.

அத்துடன் அந்த வளைவுப் பகுதியும் சமதளமாக இல்லாமல் ஏற்றத்தாழ்வான சரிவுப் பகுதியாக அமைந்திருந்தது.

தேசிய நெடுஞ்சாலையாக மாற்றியபோது, அந்த இடத்தின் தன்மையைக் கணக்கில் கொண்டு சாத்தியமான மாற்று ஏற்பாடுகளைச் செய்திருக்க வேண்டும்.

ஆனால் எந்தவித முன்திட்டமிடலும் இல்லாமல் பழைய சாலையின் அகலத்தை மட்டும் விரிவுபடுத்திவிட்டனர்.

அந்த இடம் ஏற்றத் தாழ்வான நிலப்பகுதியாகவும், வளைந்து செல்லக் கூடியதாகவும் இருக்கும் நிலையில் இப்போது அகலமான சாலையாக இருப்பதால் தொடர் விபத்துகள் நடக்கும் இடமாக மாறிவிட்டது.

இந்த சாலை விரிவாக்கத்துக்குப் பின் கடந்த சில மாதங்களில் மட்டும் குறிப்பிட்ட இடத்தில் மட்டும் மூன்று விபத்துகளில் உயிரிழப்பு ஏற்பட்டுவிட்டது.

இது தவிர அவ்வப்போது நேரிடும் விபத்துகளில் காயமடைவோர் பலர். இது முழுக்க முழுக்க தேசிய நெடுஞ்சாலைத் துறை பொறியாளர்களின் அலட்சியமான அணுகுமுறையினால் ஏற்படும் உயிர் பலிகள்தான் என்று செட்டிபாளையம் பகுதி மக்கள் கோபத்துடன் குற்றஞ்சாட்டுகின்றனர்.

குறிப்பிட்ட இடத்தில் சாலையின் மேற்குப்பகுதியில் தனியார் திருமண மண்டபம் ஒன்ற அமைந்துள்ளது. அந்த சாலையின் எதிர்புறம் கிழக்குப் பகுதியில் அந்த மண்டப உரிமையாளருக்குச் சொந்தமான காலி இடம் உள்ளது.

அந்த இடத்தை திருமண விழாக்களுக்கு வருவோரின் வாகனங்களை நிறுத்துவதற்கு பயன்படுத்திக் கொள்கின்றனர்.

இந்த இடத்தில் தேசிய நெடுஞ்சாலையாக விரிவாக்கம் செய்தபோது, சாலையின் இருபுறமும் ஒரே உரிமையாளருக்குச் சொந்தமான நிலம் இருப்பதால் அவரிடம் பேசி, சாலைக்குத் தேவையான இடத்தை காலி இடத்தில் இருந்து பெற்றுக் கொண்டு மண்டபத்தோடு ஒட்டிய சாலைப் பகுதியில் அதே அளவு இடத்தை அவர்களுக்கு மாற்றிக் கொடுத்திருக்கலாம்.

அப்படிச் செய்திருந்தால் திருமண மண்டபத்தினருக்கும் வசதியாக இருந்திருக்கும், சாலையின் வடிவமைப்பையும் ஒழுங்குபடுத்தி இருக்க முடியும்.

இப்போதிருக்கும் வளைவு நெளிவான ஏற்றத்தாழ்வான பகுதியை சீர்படுத்தி இருக்கலாம். ஆனால் இது போல் திட்டமிட்டுச் செயல்பட தேசிய நெடுஞ்சாலை துறைப் பொறியாளர்கள் அக்கறை காட்டவில்லை.இனியாவது மாவட்ட நிர்வாகம், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் இதுபோன்ற மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இன்னும் முழுமையாக பணி நிறைவடையாத நிலையில் இத்தகைய மாற்றம் செய்வதால் எந்த குழப்பமும் ஏற்படப் போவதில்லை.

எனவே இதை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செட்டிபாளையம் பகுதி வியாபாரிகள் வலியுறுத்துகின்றனர்.

இந்த தேசிய நெடுஞ்சாலையின் மொத்த நீளம் ஏறத்தாழ 32 கிலோமீட்டரில் செட்டிபாளையத்தில் மட்டும் இந்த குளறுபடி இல்லை. வேறு சில பகுதிகளிலும் இதுபோல் பலவித குளறுபடிகள் உள்ளன.

இவற்றையும் சீரமைத்து முழுமையான பயனுள்ள சாலையாக அமைக்க வேண்டும் என்பதே மக்கள் எதிர்பார்ப்பு.

இந்த விசயத்தில் போதிய அக்கறை காட்டாவிட்டாலும், தாராபுரம் சாலையில் தொங்குட்டிபாளையம் பகுதியில் சுங்கம் வசூலிப்பதற்கு சுங்கச் சாவடி (டோல் கேட்) அமைக்கும் பணி மட்டும் மிக விரிவாக, வேகமாக நடைபெற்று வருகிறது.

இதிலேயே இவர்களின் அக்கறை எதற்கானது என்பதை மக்கள் புரிந்து கொள்ள முடியும்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :