ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் எந்தத் தவறும் நடக்கவில்லை

0
546
Nirmala Sitharaman says Congress blaming desperation

ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் எந்தத் தவறும் நடக்கவில்லை என்றும் ஆட்சி அதிகாரம் இல்லாத விரக்தியில் காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டுவதாகவும் மத்திய இராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். (Nirmala Sitharaman says Congress blaming desperation)

இராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்தில் ஊடகவியலாளர்களுக்கு பேட்டியளித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றதாக காங்கிரஸ் தினமும் கூறுகின்றது. எங்கு பார்த்தாலும் ஊடகவியலாளர்கள் இது பற்றி என்னிடம் கேள்வி கேட்கிறார்கள்.

ஊழல் நடைபெற்றதாக சொல்வது தவறானது. ராகுல் காந்தி சொல்வது போல் எந்த ஊழலும் நடைபெறவில்லை. இந்த ஒப்பந்தத்தில் எச்.ஏ.எல் நிறுவனத்தை நீக்கியதால், அதிகளவிலான வேலை வாய்ப்புகள் பறிபோய்விட்டதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டுகின்றது.

முன்னர் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், ரபேல் போர் விமான ஒப்பந்தம் போடப்பட்டது.

அப்போதும் எச்.ஏ.எல் நிறுவனம் அதில் இடம்பெறவில்லை. அந்த நிறுவனம் ஒப்பந்தத்தில் இடம்பெற்றதற்கான அதிகாரபூர்வ தகவல் இல்லை. அவ்வாறு இருக்கையில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மீது காங்கிரஸ் பொய் குற்றச்சாட்டுகளை கூறுகின்றது.

அக்கட்சி நீலிக் கண்ணீர் வடிக்கிறது. எங்கள் அரசை குறை சொல்வதற்கு முன்பு, தனது நிலை என்ன என்பதை காங்கிரஸ் பார்க்க வேண்டும்.

கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக மத்தியில் பாரதிய ஜனதா சிறப்பான முறையில் ஆட்சியை நடத்தி வருகின்றது. இதுவரை ஒரு ஊழல் முறைப்பாடு கூட எங்கள் மீது இல்லை.

ஆட்சி அதிகாரம் இல்லாததால், காங்கிரஸ் கட்சி விரக்தியடைந்து எங்கள் அரசு மீது ஆதாரங்கள் இன்றி ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றது. ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் எந்த தவறும் நடைபெறவில்லை.

பெங்களூரு மாநகராட்சி மேயர் தேர்தலில் எனக்கு ஓட்டுரிமை உண்டு. ஆனால் துல்லிய தாக்குதல் தின நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டி இருந்ததால், இந்த தேர்தலில் பங்கேற்க இயலாது என்பதை நான் முன்கூட்டியே கட்சி தலைவர்களிடம் தெரிவித்துவிட்டேன்.

சர்வதேச விமான கண்காட்சி பெங்களூருவிலேயே நடக்கிறது. இது பெருமைக்குரிய விஷயம் ஆகும். தங்கள் மாநிலத்தில் விமான கண்காட்சியை நடத்துமாறு உத்தரப் பிரதேச அரசு கேட்டது உண்மை தான். இதுபோல் யாரும் கேட்கக்கூடாது என்று இல்லை என்றும் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; Nirmala Sitharaman says Congress blaming desperation