சென்னையில் தொழில் அதிபர் வீட்டில் 82 சிலைகள் பறிமுதல்

0
471
IG Pon manickavel team seized 82 Statues saidapet Chennai

சென்னை சைதாப்பேட்டையில் தொழில் அதிபர் வீட்டில் இருந்து 82 சிலைகளை ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் பறிமுதல் செய்துள்ளார். (IG Pon manickavel team seized 82 Statues saidapet Chennai)

தமிழகம் முழுவதும் பழமையான கோவில்களில் இருந்த பழங்கால சிலைகளை கடத்தி வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவம் கடந்த சில ஆண்டுகளாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.

சர்வதேச சிலை கடத்தல் மன்னனான சுபாஷ்கபூர் தமிழகத்தில் உள்ள தனது நண்பர்களுடன் சேர்ந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சாமி சிலைகளை வெளிநாட்டுக்கு கடத்தி விற்பனை செய்ததை சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தனர்.

ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தலைமையேற்ற பின்னரே, தமிழக கோவில்களில் இருந்த பழமை வாய்ந்த சிலைகள் களவாடப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதில் சுபாஷ்கபூரின் நெருங்கிய நண்பரான தீனதயாளன் கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார்.

ஆந்திராவைச் சேர்ந்த தொழில் அதிபரான இவருக்கு சொந்தமாக ஆழ்வார்பேட்டையில் 2 வீடுகள் உள்ளன.

இந்த வீடுகளில் அப்போது அதிரடி சோதனை நடத்தப்பட்டது. ஆழ்வார்பேட்டை மூர் தெருவில் நடத்தப்பட்ட சோதனையில் 300 க்கும் மேற்பட்ட சிலைகள் கைப்பற்றப்பட்டன. பழங்கால ஓவியங்களும் கிடைத்தன.

இவைகளை தீனதயாளன் தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் இருந்து திருடி அந்த வீட்டில் பதுக்கி வைத்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து தீனதயாளனின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பது பற்றி தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டது.

இந்த விசாரணையில் தீனதயாளன் பழங்கால சிலைகளை தனது நண்பர்கள் பலரிடம் கொடுத்து வைத்திருப்பதை சிலை தடுப்பு பிரிவு பொலிஸார் கண்டுபிடித்தனர்.

சைதாப்பேட்டை நீதிமன்ற பின்புறம் ஸ்ரீநகர் காலனியில் வசித்து வரும் பிரபல தொழில் அதிபர் ரன்வீர்ஷா என்பவரிடமும் தீனதயாளன் சிலைகளை கொடுத்து இருந்தார்.

அதன் அடிப்படையில் அப்போது அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. வீட்டிலும் சோதனை நடைபெற்றது.

சிலையை வாங்கியது தொடர்பாக பல்வேறு ஆவணங்களை ரன்வீர்ஷா அளித்திருந்தார். அவைகளை பொலிஸார் ஆய்வு செய்தனர். அப்போது அந்த ஆவணங்கள் அனைத்தும் போலியானது என்பது தெரிய வந்தது.

இதையடுத்து சிலை தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் இன்று காலை மீண்டும் தனது அதிரடி வேட்டையை தொடங்கினார். டி.எஸ்.பி. சுந்தரம் மற்றும் பொலிஸ்; படையினருடன் ரன்வீர்ஷாவின் வீட்டுக்கு சென்றார்.

இந்த சோதனையின் ரன்வீர்ஷாவின் வீட்டில் குவியலாக சிலைகள் இருந்தது. 82 சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தன.

இதில் ஐம்பொன் சிலைகளும் அடங்கும். அனைத்தையும் ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் பறிமுதல் செய்தார். இந்த சிலைகளில் பெரும்பாலானவை அசைக்க முடியாத அளவுக்கு வலுவானதாக உள்ளது.

கோவில்களில் காணப்படும் பிரமாண்டமான கல் சிலைகளும் ரன்வீர்ஷாவின் வீட்டில் இருந்தது. இந்த சிலைகளை கிரேன் மூலம் தூக்கி லொரிகளில் ஏற்றி கொண்டு செல்லவும் பொலிஸார் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

இந்த சோதனை காரணமாக சைதாப்பேட்டை பகுதியில் பரபரப்பு நிலவியது. அதிகளவிலான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; IG Pon manickavel team seized 82 Statues saidapet Chennai