முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத கருத்து; கிழக்கு மாகாணத்தில் ஹர்த்தாலுக்கு அழைப்பு

0
569
Call Hartal Eastern Province

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள நிர்வாக பயங்கரவாதம், இனவாதக் கருத்துக்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் நாளைய தினம் மட்டக்களப்பில் ஹர்த்தால் அனுஷ்டிப்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. (Call Hartal Eastern Province)

நீதி கோரும் மக்கள் குரல், முஸ்லிம் சிவில் அமைப்புக்களின் ஒன்றியம் உள்ளிட்ட பல அமைப்புக்கள் ஒன்றிணைந்து ஹர்த்தாலுக்கான அழைப்பு விடுத்துள்ளன.

அத்துடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் ஹர்த்தாலுக்கான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டும், துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

குறித்த சுவரொட்டிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழ் பகுதிகளில் முஸ்லிம்கள் வியாபாரம் செய்வதற்கு, குடியேறுவதற்கு, தொழில் செய்வதற்கு, சட்ட ரீதியாக தமது பூர்வீக நிலங்களை பெற்றுக்கொள்வதற்கு விதிக்கப்படும் தடைகள் மற்றும் முஸ்லிம்கள் தொடர்பில் அண்மைக்காலமாக திட்டமிட்ட ரீதியில் மேற்கொள்ளப்படும் ஆயுதக் குற்றச்சாட்டு உள்ளிட்ட இனவாத வன்மம் பிரச்சாரங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் கரி நாள் அனுஷ்டிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஆயுத ரீதியான பயங்கரவாதம் தோல்வியுற்ற நிலையில் முஸ்லிம்களுக்கு எதிராக பொருளாதார மற்றும் நிர்வாக பயங்கரவாதம் ஆரம்பித்து வைத்துள்ளதாகவும்,

தமிழ் அரசியல் தலைவர்கள் மற்றும் கட்சிகள் தமது அரசியல் நோக்கங்களுக்காக இவ்வாறான முஸ்லிம் விரோத செயற்பாடுகளை கட்டவிழ்த்து விட்டுள்ளதாகவும் இதனால் அப்பாவி தமிழ், முஸ்லிம் மக்களிடையே பகைமை வளர்ந்து வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், புல்லுமலை தண்ணீர் தொழிற்சாலை விவகாரம் சம்பந்தமாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் மற்றும் தியேட்டர் மோகன் உள்ளிட்டவர்கள் இனவாத அடிப்படையில் செயற்படுவதாகவும்,

சட்ட ரீதியான முறையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள குறித்த தொழிற்சாலை விடயத்தை போலிக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பெரிதுபடுத்தி இனக்கலவரம் ஒன்றினை ஏற்படுத்த குறித்த இருவரும் முனைவதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே, தமிழ் முஸ்லிம் மக்கள் இணைந்து ஒற்றுமையாக வாழ்வதற்கான சூழலை தாமாகவே ஏற்படுத்திக் கொள்வதற்கும் இனவாதத்தை விதைக்கும் அரசியல் சக்திகளுக்கு எதிராக தமது எதிர்ப்பினை காட்டுவதற்கும் குறித்த ஹர்த்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Call Hartal Eastern Province