பலாலி: இந்தியா முன்வைத்த திட்டம் நிராகரிக்கப்பட்டுள்ளது

0
549
Palali Airport Development Plan

பலாலி விமான நிலைய அபிவிருத்தி குறித்து இலங்கை விமானப்படையே செயலாக்க ஆய்வை மேற்கொள்ளப் போவதாக, சிறிலங்காவின் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். Palali Airport Development Plan

பலாலி விமான நிலையத்தை இந்தியாவிடம் கையளிக்க சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக, கூட்டு எதிரணி குற்றம்சாட்டி வரும் நிலையில், கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார்.

“பலாலி விமான நிலைய விரிவாக்கம் தொடர்பாக இந்தியா முன்வைத்த திட்டம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா விமானப்படை இந்தப் பணியை முன்னெடுக்கும். இதற்குத் தேவைப்படும் 1.2 பில்லியன் ரூபாவை சிறிலங்கா அரசாங்கமே வழங்கும்.

ஏ-320 விமானங்கள் தரையிறங்கும் வகையில் பலாலி விமான ஓடுபாதை விரிவாக்கப்படும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தென்னிந்தியாவுக்கு விமானங்களை இயக்கும் வகையில், பிராந்திய விமான நிலையமாக விரிவாக்குவதற்கு அமைச்சரவையிடம் அனுமதி கோரும் பத்திரம், மூன்று அமைச்சுக்கள் இணைந்து சமர்ப்பிக்கவுள்ளதாக, தகவல்கள் வெளியாகியிருந்தது.

அத்துடன், மூன்று பேர் கொண்ட இந்திய விமான நிலைய அதிகார சபையின் அதிகாரிகள் குழுவொன்றும், அண்மையில் பலாலிக்கு வந்து ஆய்வுகளை மேற்கொண்டிருந்தது.

அதேவேளை, சிறிலங்கா விமானப்படை பேச்சாளர் குறூப் கப்டன் கிகான் செனிவிரத்னவிடம், சாத்திய ஆய்வு மற்றும் ஓடுபாதை விரிவாக்கம், பற்றி கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று கேள்வி எழுப்பிய போது,

“விமான நிலைய விரிவாக்கம் குறித்த சாத்திய ஆய்வு பற்றிய கோரிக்கை அரசாங்கத்தினால் விடுக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா விமானப்படை சாத்திய ஆய்வை மேற்கொண்டு வருகிறது.

இதற்கான வழிமுறைகள் இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை. வழிமுறைகள் தீர்மானிக்கப்படும் வரையில், இந்த திட்டம் தொடர்பாக கருத்து வெளியிட முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.