குழந்தை உயிரிழப்பு – வைத்தியரை கைது செய் – கலஹாவில் தொடர்ந்தும் மக்கள் ஆர்ப்பாட்டம்!

0
601
People continue demonstrate Galaha

{ People continue demonstrate Galaha }
நேற்று (28) காலை ஒன்றரை வயதான சங்கர் சஜீவன் என்ற ஆண் குழந்தை சுகயீனம் காரணமாக கலஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சில மணிகளில் உயிரிழந்துள்ளது.

குழந்தை இறந்ததை தொடர்ந்து கலஹா வைத்தியசாலையில் மருத்துவர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நிகழ்ந்து வருகின்றது. அப்பகுதியில் நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர பொலிஸார் மற்றும் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் குறித்து தெரியவருவதாவது:

கலஹா மருத்துவமனையில் குழந்தையை அனுமதித்து இரண்டு மணி நேரம் கடந்தும் வைத்தியர்கள் உரிய முறையில் சிகிச்சை அளிக்காத காரணத்தால் பெற்றோர் முச்சக்கர வண்டியொன்றில் குழந்தையை பேராதெனிய வைத்தியசாலைக்கு எடுத்து செல்ல முற்பட்டுள்ளனர்.

இருப்பினும் வைத்தியசாலையில் அம்புலன்ஸ் வசதி இல்லாத காரணத்தால் வைத்தியர்கள் அதற்கு அனுமதி வழங்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. அத்தோடு, குறித்த குழந்தைக்கு சிகிச்சை வழங்கிக் கொண்டிருக்கும் போதே குழந்தை உயிரிழந்ததாக வைத்தியசாலை தாதி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதனால் கோபமடைந்த பிரதேசவாசிகள் வைத்தியசாலையையும் வைத்தியர்களின் வாகனங்களையும் சேதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு பொலிஸார் மற்றும் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும் நிலைமையை இதுவரையில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியாதுள்ளதுடன் வைத்தியர்கள் உரிய முறையில் சிகிச்சை அளிக்காத காரணத்தால் தான் குழந்தை உயிரிழந்ததாக பிரதேசவாசிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இந்த சந்தர்ப்பத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கடிதம் ஒன்றை காண்பித்து குறித்த வைத்தியரை கண்டி மாகாண சுகாதார திணைக்களத்திற்கு இடம்மாற்றம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இருப்பினும் அந்த கடிதத்தை ஏற்றுக்கொள்ளாத பிரதேசவாசிகள் வைத்தியரை கைது செய்யுமாறு கூச்சலிட்டு வருகின்றனர்.

குறித்த வைத்தியர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்பிற்கு மத்தியில் இருப்பதாகவும் பிரதேசவாசிகளும் வைத்தியசாலையை சுற்றி வளைத்து இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அப்பகுதியில் மக்கள் வைத்தியரை கைது செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதால் தொடர்ந்தும் பதற்ற நிலை நிலவுவதாகவும் செய்திகள் தெரிவிக்கப்படுகின்றது.

Tags: People continue demonstrate Galaha

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை]

Tamil News Group websites