வியாழக்கிழமையும் நீடிக்குமா குழப்பம்?

0
493
Northern Provincial Council Confusion

வடக்கு அமைச்சரவை தொடர்பில் மேன் முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்படாமையால் எழுந்துள்ள குழப்பம் நாளைமறுதினம் வியாழக்கிழமை இடம்பெறும் அமர்விலும் எதிரொலிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது Northern Provincial Council Confusion

ஆளும் கட்சி உறுப்பினர் அ.பரஞ்சோதி, முதலமைச்சரிடம் எழுப்பியுள்ள கேள்வியே, இந்தக் குழப்பத்தை தோற்றுவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு அமைச்சரவையிலிருந்து தான் நீக்கப்பட்டமைக்கு எதிராக டெனீஸ்வரன் மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்குத்

தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கில் கடந்த ஜூன் மாதம் 29ஆம் திகதி இடைக்கால கட்டளை வழங்கப்பட்டது. அதன்படி டெனீஸ்வரன் மீண்டும் சட்டப்படியான அமைச்சரானார். ஆனால் அவர் தனது பதவியை ஏற்பதற்கு இதுவரையில் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. ஏற்கனவே வடக்கு அமைச்சரவையில் 5 அமைச்சர்கள் இருந்த நிலையில் டெனீஸ்வரனுடன் சேர்த்து 6 அமைச்சர்களாக அது உயர்ந்தது. சட்டப்படி 5 அமைச்சர்கள் மட்டுமே இருக்கலாம் என்பதால் தற்போது வடக்கு அமைச்சரவை முடங்கிப் போயுள்ளது.

இந்தப் பிரச்சினை மாகாண சபையின் கடந்த 4 அமர்வுகளிலும் எதிரொலித்தது. முதலமைச்சர் மற்றும் ஆளுநர் இணைந்து இதற்கொரு முடிவு கட்டப்படவேண்டும் என்றும் சபை அழுத்தம் கொடுத்தது. ஆனால் இது விடயத்தில் எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படவில்லை.
நாளைமறுதினம் வியாழக் கிழமை நடைபெறவுள்ள அமர்விலும், அமைச்சரவை விவகாரம் மீளக் கிளறப்படவுள்ளது. வடக்கு மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் அ.பரஞ்சோதி, முதலமைச்சரிடம் வாய்மூல வினா எழுப்பியுள்ளார்.

அதில், ‘‘கடந்த 20ஆம் திகதி வலி.கிழக்குப் பிரதேச சபை மண்டபத்தில் வைத்து மாகாணக் கல்வி அமைச்சரினால் குறித்தொதுக்கப்பட்ட நிதி மூலம் கொள்வனவு செய்யப்பட்ட பொருள்கள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டனவா? அது மாகாணசபையின் வேலைத் திட்டம் என்பதால் உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா? அதில் உயர் அதிகாரிகளுடன் ஒரு கட்சியைச் சேர்ந்த உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் மட்டும் கலந்துகொண்டமையின் மர்மம் என்ன? இதில் கல்வி அமைச்சர் கலந்து கொண்டதாக பத்திரிகைகள் வாயிலாக அறிந்தேன். உண்மையில் இப்போது சபையில் எத்தனை அமைச்சர்கள் பதவியில் இருக்கின்றார்கள்?’’ என்று கேட்கப்பட்டுள்ளது.

 

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

 

Northern Provincial Council Confusion