அட்டூழியத்தின் உச்சம்: கடனை வசூலிக்க நிதி நிறுவனம் செய்த கொடூரங்கள்

0
577

அனுராதபுரம் கல்நெவ ஜன உதான கிராமத்தில் நுண்கடன் நிறுவனமொன்று கடனை மீளப்பெற்றுக்கொள்ளும் பொருட்டு முன்னெடுத்த நடவடிக்கைகள் தொடர்பில் அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளன Micro Finance Company Atrocity

குறித்த பிரதேசத்தில் கடன் தவணையை செலுத்தத்தவறிய பெண்கள் சிலரை  குறித்த நிதி நிறுவனம் நடத்திய விதம் கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.

கடனை செலுத்தத்தவறிய 16 பெண்கள் மற்றும் அவர்கள் கடனை பெற உத்தரவாதமாக கையொப்பமிட்ட கணவர்மாரும், கடந்த சில தினங்களுக்கு முன்னர் மத்தியஸ்த சபைக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

இதன்போதே நுண்கடன் நிறுவனங்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் தாம் முகங்கொடுத்த அவமானங்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் தொடர்பில் வெளிப்படுத்தியுள்ளனர்.

வெறும் மூன்று வாரங்கள் செலுத்தத் தவறியமையே இந்த கடும் நடவடிக்கைகளுக்கு காரணமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடும் பொருளாதார நெருக்கடி காரணமாகவே இந்த தவணைகளை செலுத்த முடியாமல் போனதாக அப்பெண்கள் தெரிவித்துள்ளனர். எனினும் சற்றும் இரக்கமின்றி இந்த நிதி நிறுவனங்கள் நடந்துகொண்டதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நேரத்துக்கு செலுத்த முடியாமைக்கான தண்டப்பணமாக 9 ஆயிரம் ரூபாவையும், நிதி நிறுவனம் அறவிடுவதாக குறிப்பிடப்படுகின்றது.

கடன் தவணையை அறவிடும் பொருட்டு வந்த முகவர்கள் செய்த அட்டூழியங்கள் தொடர்பிலும் குறித்த பெண்கள் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஒரு தடவை வீட்டில் மரணச் சடங்கு நடந்து கொண்டிருந்த போது கூட அங்கு வந்த முகவர் ஒருவர் கடன் தொகையை பெற்றுச்சென்றதாக பெண்ணொருவர் தெரிவித்துள்ளார்.

இதனைப் போல தனது பிள்ளை புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றுவதற்கு முதல் நாள் வந்த முகவர் ஒருவர் தம்மை மிக மோசமாக அச்சுறுத்திச் சென்றதாகவும், இதனால் தனது பிள்ளை மிகவும் பயந்து கடும் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் பெண்ணொருவர் தெரிவித்துள்ளார்.

நுண்கடனை மீளச்செலுத்த முடியாமல் தவிக்கும் பெண்களுக்கு உதவ அரசாங்கம் முன் வந்துள்ள நிலையில் இச்சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

குறிப்பாக இத்தகைய நுண்கடன் நிறுவனங்கள் தமது ஆவணங்களை ஆங்கிலத்திலேயே கொண்டுவருவதாகவும், அதனை படித்தறிந்துகொள்ள முடியாத பலர் வேறு வழியின்றி அதில் கையொப்பமிடுவதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.

சில அதிகாரிகள் உயிர் அச்சுறுத்தல் விடுத்த சம்பவங்களும் இங்கு பதிவாகியுள்ளன. மேலும் பிணக்கினை தீர்ப்பதற்கான மத்தியஸ்த சபைகளில் இருப்பவர்களும் தங்கள் ஆட்களே என நிதி நிறுவன பிரதிநிதிகள் கூறி அச்சுறுத்திய சம்பவங்களும் இதன்போது பதிவாகியுள்ளன.