Type to search

துருக்கி – அமெரிக்கா மோதல் உச்சத்தில்!

USA WORLD

துருக்கி – அமெரிக்கா மோதல் உச்சத்தில்!

Share
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு துருக்கி லிராவின் மதிப்பு படுவீழ்ச்சியடைந்தது. Turkey US relationship

வெள்ளிக்கிழமை மட்டும், டாலருக்கு நிகரான லிராவின் மதிப்பு 14 சதவீதத்துக்கும் மேல் குறைந்தது.
இந்த திடீர் சரிவுக்குக் காரணமாக துருக்கி கைகாட்டியது வேறெந்த நாட்டையும் அல்ல, தனது நேட்டோ கூட்டாளியான அமெரிக்காவைத்தான்!

துருக்கியின் லிரா அதலபாதாளத்துக்குச் சென்ற வெள்ளிக்கிழமைதான், அந்த நாட்டிலிருந்து இறக்குமதியாகும் இரும்பு மற்றும் அலுமினியப் பொருள்கள் மீதான வரி இரட்டிப்பாக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்திருந்தார்.

மத மாற்றம் மற்றும் தேசத் துரோக குற்றச்சாட்டுகளின் பேரில், துருக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமெரிக்க கிறிஸ்துவ மதபோதகரான ஆண்ட்ரூ பிரன்ஸன் என்பவரை விடுவிக்க வலியுறுத்தி இந்த பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டது. அதற்கு முன்னரே, பல்வேறு காரணங்களால் துருக்கியின் பொருளாதாரம் தடுமாற்றத்தில்தான் இருந்து வந்தது.

கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற தேர்தலில் அதிபர் எர்டோகன் மீண்டும் வெற்றி பெற்றதே, வலிமையான தலைமையின் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை சீரமைப்பதாக அவர் அளித்த வாக்குறுதியால்தான் என்று கூட சொல்லப்படுவதுண்டு.

இந்த நிலையில், துருக்கியப் பொருள்கள் மீது அதிபர் டிரம்ப் அறிவித்த கூடுதல் வரி விதிப்பும் அந்த நாட்டின் பொருளாதாரத்தை நிலைகுலையச் செய்தது என்பதை மறுப்பதிற்கில்லை என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.

இந்தப் பொருளாதாரத் தடை அறிவிப்பையும், அதனைத் தொடர்ந்து லிரா மதிப்பு வீழ்ச்சியடைந்ததையும் தொடர்ந்து, எர்டோகன் அரசு டிரம்ப்பை மிகக் கடுமையாக விமர்சித்தது.
பொருளாதாரத் தடைகள் மூலம் பிற நாடுகளை மிரட்டிப் பணிய வைக்க நினைக்கும் பழக்கத்திலிருந்து அமெரிக்கா மீண்டு வர வேண்டும் என்றும், இல்லையென்றால், பிற நாடுகளுடன் இணைந்து அந்த நாட்டை வழிக்குக் கொண்டு வருவோம் என்றும் துருக்கி வெளியுறவுத் துறை அமைச்சர் முகமது ஜாவத் ஸரீஃப் எச்சரிக்கை விடுத்தார்.

ஆக, மதபோதகர் ஆண்ட்ரூ பிரன்ஸனை விடுவிக்காமல், அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்வதில் துருக்கி மிக உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது.

எனினும், உலகின் பொருளாதார ஜாம்பவானான அமெரிக்காவை எதிர்த்து எர்டோகன் நடத்தும் இந்த யுத்தம் வெற்றி பெறுமா?

எதற்கெடுத்தாலும் பொருளாதாரத் தடைகளை விதிக்கும் அமெரிக்காவை எதிர்கொள்ள, உலகின் பிற நாடுகளோடு இணைந்து செயல்படப் போவதாகக் கூறியிருக்கிறார் எர்டோகன்.
உண்மையில், ரஷியாவுடனான பொருளாதார உறவை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் அவர் ஏற்கெனவே இறங்கிவிட்டார்.

அதுமட்டுமன்றி, முக்கிய ஐரோப்பிய நாடுகளின் கூட்டுறவையும் அவர் மேம்படுத்தி வருகிறார். மேலும், ஈரானில் இருந்து துருக்கி பெருமளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது.
இந்த அனுகூலங்களை அடிப்படையாகக் கொண்டு, பொருளாதார ரீதியில் தம்மைத் தனிமைப்படுத்த நினைக்கும் டிரம்ப்பின் நோக்கத்தை துருக்கி மழுங்கடிக்கலாம்.

இருந்தாலும், அத்தகைய செயல்கள் எர்டோகனுக்கு அமெரிக்காவில் மேலும் பல எதிரிகளை ஏற்படுத்தித் தரும் என்று எச்சரிக்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

ஏற்கெனவே, துருக்கியை அதிபர் எர்டோகன் சர்வாதிகாரப் பாதைக்கு இட்டுச் சென்றுள்ளதாக பல்வேறு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்புக் குரல் கொடுத்து வருகின்றனர்.

அண்மையில்தான் துருக்கியின் மிக முக்கியத் தேவையான எஃப்-35 ரக போர் விமானங்களை அந்த நாடு வாங்குவதைக் கடினமாக்கும் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் நிறைவேற்றினர்.
இந்தச் சூழலில், அமெரிக்காவுக்கு எதிராக ரஷியா போன்ற நாடுகளுடன் கூட்டணி அமைத்தால் அது எர்டோகனுக்கு எதிர்வினையாக அமையும் என்று பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
மேலும், சர்வதேச பொருளாதாரச் சூழல் அமெரிக்காவுக்குச் சாதகமாக இருப்பதை நிபுணர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

அமெரிக்கா – துருக்கி இடையிலான வர்த்தகப் போர் உலக அளவிலான பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் பிற நாடுகள் அமெரிக்காவுக்குச் சாதமாகவே நடந்துகொள்ளும் என்றும் பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.

எனவே, இந்த விவகாரத்தில் அமெரிக்காவைத் தனிமைப்படுத்தும் முயற்சியில் எர்டோகன் வெற்றி பெறுவது கடினம் என்பது அவர்கள் கணிப்பு.

அதே நேரம், இந்த மோதலால் நேட்டோ கூட்டாளியும், பிராந்திய வல்லரசுமான துருக்கி, அமெரிக்காவின் பரமவைரியான ரஷியாவுடன் நெருக்கமாவதற்கான வாய்ப்பையும் பார்வையாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

பொருளாதாரத் தடைகள் மூலம் துருக்கியை வழிக்குக் கொண்டு வர முடியாது; தூதகரப் பேச்சுவார்த்தைகள் மூலமே நினைத்ததை சாதிக்க முடியும் என்பது அவர்களது வாதம்.

அதை மீறி, துருக்கிக்கு பொருளாதார அச்சுறுத்தலை ஏற்படுத்துவதன் மூலம் சர்வதேச அரசியலில் அமெரிக்காவுக்கு பின்னடைவு ஏற்படும் என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.

அந்த வகையில், அமெரிக்காவின் பொருளாதாரத் தடையும், அதற்கு துருக்கி அளிக்கும் பதிலடியும் இரு நாடுகளுக்குமே சாதகமாக அமையப் போவதில்லை என்பதே நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
இருந்தாலும், இந்த விவகாரம் மூலம் டிரம்ப்பும், எர்டோகனும்தங்கள் சொந்த நாட்டில் அரசியல் ஆதாயம் அடைய முடியும் என்று ஒரு சில அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

ஏற்கெனவே, துருக்கியில் ஏழரை ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாஸா விஞ்ஞானி செர்கன் கோல்ஜியை விடுவிப்பதற்குக் காட்டாத தீவிரத்தை, கிறிஸ்துவ மதபோகர் ஆண்ட்ரூ பிரன்ஸனை விடுவிப்பதில் டிரம்ப் காட்டியுள்ளார்.

இதன் மூலம் தனது ஆதரவாளர்களிடையே டிரம்ப்பின் செல்வாக்கு அதிகரிக்கும். அதுபோலவே, தனக்கு எதிரான எதிர்க்கட்சியினரின் குரல்களை முழுமையாக அடக்கி, துருக்கி மக்களிடையே தனது செல்வாக்கை மேலும் அதிகரிக்க அதிபர் எர்டோகனுக்கு இந்த பொருளாதாரத் தடை வழிவகுக்கும் என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்.


 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
Tags:

You Might also Like