கன்னித் தமிழ் உள்ள வரை கலைஞர் புகழ் நிலைத்திருக்கும் – அமைச்சர் திகாம்பரம்

0
562
Karunanidhi passes away mourning Minister Palany thigambaram

தமிழ் கூறும் நல்லுலகத்தின் தலைமகனான கலைஞர் கருணாநிதியின் மறைவு தமிழகத்துக்கு பேரிழப்பு என்றாலும், கன்னித் தமிழ் உள்ள வரை அவரின் புகழ் காலமெல்லாம் நிலைத்திருக்கும் என்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சருமான பி. திகாம்பரம் தெரிவித்துள்ளார். (Karunanidhi passes away mourning Minister Palany thigambaram)

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான கலைஞர் கருணாநிதியின் மறைவை முன்னிட்டு அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் உள்ள மூத்த அரசியல் தலைவர்களில் பல்வேறு திறமைகளையும் ஆளுமையையும் பெற்றுள்ள ஒரே தலைவர் என்ற பெருமைக்கு உரிய கலைஞர் இலக்கியம், திரைப்படம், இயல், இசை, நாடகம் என முத்தமிழ் வித்தகராக ஓய்வின்றி உழைத்த ஒப்பற்ற மூதறிஞராவர்.

பெரியாரின் பாசறையில் வளர்ந்து அண்ணாவின் அரவணைப்பில் அனுபவம் பெற்று தமிழ்த் தாய்க்கு அளப்பரிய தொண்டுகளை செய்து ஏராளமான நூல்களை படைத்துள்ளார்.

உலகெங்கும் வாழ்கின்ற கோடிக் கணக்கான தமிழ் நெஞ்சங்களில் அவர் இடம்பிடித்துள்ளார்.

அண்ணாவின் மறைவுக்குப் பின்னர் திராவிட முன்னேற்றக் கழகத்தை கட்டுக் கோப்புடன் வழிநடத்தி கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்னும் தாரக மந்திரத்தை நிலைநாட்டி 13 முறை சட்டமன்ற உறுப்பினராகவும்,

5 முறை தமிழக முதலமைச்சராகவும் இருந்து சாதனை படைத்து, ஏழை எளிய மக்களுக்கான நலத் திட்டங்களை வகுத்து, ஒப்ப்பாரும் மிக்காரும் இல்லாத தலைவராய் வாழ்ந்து மறைந்த கலைஞரின் மறைவால் துயரக் கடலில் ஆழ்ந்துள்ள கோடிக் கணக்கான மக்களுடன் மலையக மக்களும் பங்கு கொண்டு அமரர் கலைஞருக்கு அஞ்சலி செலுத்துகின்றார்கள்.

‘தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் காணப்படும்’ என்ற வள்ளுவர் வாக்குக்கு ஒப்ப, தமிழுக்கும் தமிழ் நாட்டுக்கும், தமிழ் மக்களுக்கும் அவர் ஆற்றியுள்ள பணிகள் ஊடாக கன்னித் தமிழ் உள்ளவரை கலைஞர் புகழ் நிலைத்திருக்கும்.

காலத்தால் மறைந்தாலும் காவியத் தமிழின் ஊடாக அவர் என்றும் எம்மோடு வாழ்ந்து கொண்டே இருப்பார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Karunanidhi passes away mourning Minister Palany thigambaram