அரசு வன்முறையின் பிடியில் ஊடகங்கள்

0
647
india tamil news media grip state violence

தமிழகத்தின் பத்திரிகையாளர் சிலர் பிரதமரை தமிழக பாஜக நிர்வாகிகள் ஏற்பாட்டில் சந்தித்தது குறித்தும், அது குறித்து வெளிப்படையாக செய்திகள் வராதது குறித்தும் ஒரு பதிவில் கூறியிருந்தது.india tamil news media grip state violence

இந்த பதிவு குறித்தான எதிர்வினைகளும் அதில் தாக்குதலுக்கு இலக்காகும் பத்திரிகையாளர்கள் குறித்தும் கவனித்தால் இந்த விமர்சனத்தின் நோக்கம் தாண்டி தமிழகத்தில் தற்போது நிலவி வரும் நல்லதோ, கெட்டதோ அவற்றை நிறுவனங்களின் தன்மையிலிருந்து விலக்கி தனி மனிதர்களின் குணமாக பார்க்கும் நிலையில் ஒரு குறிப்பிட்ட பகுதியினர் மீது தாக்குதல் தொடுப்பதற்கு இதை வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்வதும் வெளிப்படையாகத் தெரிகிறது. அந்த பதிவின் நோக்கம் சில கேள்விகளை எழுப்புவதே.

1. இது பிரதமருடனான சந்திப்பு என்றால் இதை மத்திய செய்தி மற்றும் தகவல்துறை தான் ஏற்பாடு செய்திருக்க வேண்டும். மாறாக, பாஜகவினர் இதை ஏற்பாடு செய்தது ஏன்?

2. இது ரகசியமான சந்திப்பு எனில் இந்த புகைப்படத்தை பாஜகவினர் வெளியிட வேண்டிய அவசியம் ஏன்?

3. சில பத்திரிகையாளர்களை குறிவைத்து அவமானப்படுத்தும் அல்லது அவர்களது நம்பகத் தன்மையை சீர்குலைக்கும் தன்மை கொண்டதா?

4. கோப்ரா போஸ்ட் இணைய தளம் இந்தியா முழுவதுமுள்ள சில பத்திரிகையாளர்களையும் பத்திரிகை முதலாளிகளையும் சந்தித்து இந்துத்துவாவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வேண்டுமென்று கேட்ட போது தாங்கள் ஏற்கனவே அப்படி செய்து கொண்டிருப்பதாகவும் தொடர்ந்தும் அப்படி செய்ய தயார் என்றும் அதற்காக தரும் பணத்தை பெற்றுக் கொள்ள தயார் என்றும் சொன்ன காணொளிக் காட்சிகள் வந்த பிறகும் அதில் தினமலர் உரிமையாளர்களில் ஒருவர் பேசியதும் வந்தபிறகு அதன் மீது கருத்துச் சொல்லாத பல பேர் இப்போதும் கருத்து சொல்லியிருக்கிறார்கள் ஆனால் என். ராம், குணசேகரன், கார்த்திகைச் செல்வன் ஆகிய மூவர் மட்டுமே ஒட்டுமொத்த தாக்குதலுக்கும் இலக்காகியிருப்பதை பார்க்க முடிகிறது. இது தற்செயலானதா?

5. தமிழகத்தில் பொதுவாக நபர் சார்ந்து விமர்சனங்களோ, பாராட்டுக்களோ முன்வைக்கப்படுவதே ஆதிக்கம் செலுத்துகிறது. ஆனால், ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் ஒருவர் அந்த நிறுவனம் மிகக் குறிப்பாக ஒரு குறிப்பிட்ட விஷயத்தை பின்பற்ற வேண்டுமென்று சொன்னால் அவருக்கு இருக்கும் வாய்ப்புகள் இரண்டே இரண்டு தான். ஒன்று நிர்வாகத்தின் வழிகாட்டுதல்களை ஏற்றுக் கொள்வது அல்லது அந்த பொறுப்பிலிருந்தோ, நிறுவனத்திலிருந்தோ விலகிக் கொள்வது.

6. இன்றிருக்கும் ஊடகங்களுக்கான வருவாய் முறை, விளம்பர வருவாயின்றி எந்த ஊடகமும் தொடர்ந்து செயல்பட முடியாத நிலை இவையெல்லாம் ஊடகங்கள் அரசை சார்ந்து நிற்க வேண்டும் என்கிற நிலைமையை உருவாக்கியிருக்கின்றது. இது இந்தியா முழுவதும் கடந்த காலத்திலும் அங்கும், இங்குமாக ஒரு சில பத்திரிகைகளுக்கு சாதகமாகவும், ஒரு சிலவற்றிற்கு எதிர்ப்பாகவும் இருந்ததை பார்த்திருக்கிறோம். ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு இதை ஒரு கொள்கையாக தன்னை ஏற்காதவர்களை அழிக்கும் கொள்கையை கடைப்பிடிக்கிறார்கள்.

7. இந்த பின்னூட்டங்களில் பலவும் இந்த அம்சத்தை கணக்கில் எடுக்க தவறுகின்றன. உதாரணமாக தெஹல்காவிற்கு ஏற்பட்ட கதி, இந்துஸ்தான் டைம்ஸ் ஆசிரியர் வெளியேற்றப்பட்டது, எக்கனாமிக் டைம்சுக்கு ஏற்பட்ட கதி, என்.டி.டி.வியின் மீதான தாக்குதல், டைம்ஸ் ஆப் இந்தியா இரண்டு முறை தான் வெளியிட்ட கட்டுரைகளை தானே யாருக்கும் அறிவிக்காமல் அழித்தது, தற்போது ஏபிபி தொலைக்காட்சியின் மூன்று பத்திரிகையாளருக்கு ஏற்பட்டுள்ள கதி, தமிழகத்தில் பிரபலமான நெறியாளர்கள், எழுத்தாளர்கள் பல பேர் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிலிருந்து வெளியேற்றப்பட்டது, ஒதுக்கி வைக்கப்பட்டது அல்லது வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டது, கட்டுரைகளில் கை வைத்து இப்படித்தான் இருக்க வேண்டுமென்று வற்புறுத்துவது, விவாத நிகழ்ச்சிகளுக்கு இன்னாரை கூப்பிட வேண்டும், இன்னாரைக் கூப்பிடக் கூடாது என்று தடை விதிப்பது, விவாதங்களில் ஊடாகவும், வேறு முறைகளிலும் மிரட்டுவது இவையெல்லாம் நடந்து கொண்டே இருக்கிறது. ஆனால், இந்த பின்னூட்டங்களில் இவை பற்றி எதுவுமே இல்லை என்பது தற்செயலானது அல்ல. இதில் பல அம்சங்கள் பின்னூட்டமிட்டவர்களின் கவனத்திற்கு வராமல் போயிருக்கக் கூடும். ஆயினும் இது தான் உண்மை.

எனவே, எந்தவொரு செய்திக்கும் நோக்கம் இருப்பது போல விமர்சனங்களுக்கும் நோக்கம் இருக்கிறது. நிறுவனங்களில் மீதான அரசின் வன்முறையை புரிந்து கொள்வதற்கு பதிலாக, நபர்களை பற்றியான விமர்சனம் எந்த வகையிலும் ஜனநாயகத்திற்கு உதவாது. அதனால் தான் 56 இன்ஞ் என்று சொன்னால் ஏதோ மல்யுத்தத்திற்கு போகிறவர் போன்று எல்லாவற்றையும் சாதித்து விடுவார் என்று நினைப்பதும், வாய்ப்பேச்சுக்களை நம்பி 5 ஆண்டு காலம் வாழ்க்கையை மட்டுமின்றி வாழும் நாட்டையும் சீர்குலைக்க அனுமதித்ததும்.

உண்மையில் அவர் சார்ந்துள்ள இயக்கம் ஒவ்வொரு பிரச்சனையிலும் என்ன கொள்கை வைத்திருக்கிறது என்று பார்க்காததன் விளைவை இன்றளவும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :