இந்தியாவுடன் நல்லுறவைப் பேணுவேன்! சீனாவிடம் கற்றுக்கொள்வேன் – இம்ராம்கான்

0
789
TAMIL NEWS pakistan election imran khan open talk live

(TAMIL NEWS pakistan election imran khan open talk live)

இந்தியாவுடன் நல்லுறவைப் பேணுவதற்கு விரும்புவதாக, பாகிஸ்தான் தேர்தலில் முன்னிலை பெற்றுள்ள பி.டி.ஐ கட்சியின் தலைவரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

இன்று மாலை ஏறத்தாழ 50 சதவீதத்திற்கும் மேல் பெறுபேறுகள் வெளியான நிலையில், தனது கட்சி ஆட்சியமைக்கப் போவதாக இம்ரான்கான் அறிவித்துள்ளார்.

இதனை முன்னிட்டு, நாட்டுமக்களுக்கு நேரலையில் உரையாற்றிய இம்ரான்கான், கடந்த 22 ஆண்டு கால போராட்டத்துக்குப் பின்னர் தனக்கு இந்த வாய்ப்புக் கிடைத்திருப்பதாக பெருமிதம் கொண்டார்.

பொருளாதாரக் கொள்கை உள்பட உள்நாட்டுக் கொள்கை, வெளியுறவுக் கொள்கை ஆகியவற்றுடன் பல்வேறு அம்சங்கள் தொடர்பாக விரிவாக உரையாற்றிய அவர், ஆக்கப்பூர்வமாக செயல்படுவதற்கான தனது விருப்பத்தை வெளியிட்டார்.

வெளியுறவுக் கொள்கை குறித்துப் பேசும்போது, சீனாவுடன் தனது அரசு மிக நெருக்கமாக செயல்படும் என்று தெரிவித்தார்.

பாகிஸ்தானின் மேம்பாட்டுக்கு சீனா பல வகைகளில் தொடர்ந்து உதவி வருவதாகக் குறிப்பிட்ட அவர், வறுமை ஒழிப்பு தொடர்பாகவும், ஊழல் ஒழிப்பு தொடர்பாகவும் சீனாவிடமிருந்து கற்றுக்கொள்ளப் போவதாகத் தெரிவித்தார்.

பாலிவுட் சினிமா வில்லனா?

இந்திய ஊடகங்கள், தன்னை ஒரு பாலிவுட் சினிமா வில்லன் போல சித்தரிப்பதாகவும், ஆனால், இந்தியாவுடன் நெருக்கமான உறவை விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக உறவை வலுப்படுத்த வேண்டும் என்று விருப்பம் வெளியிட்டார்.

காஷ்மீரில் தொடர்ந்து மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாகவும் இந்தப் பிரச்சனைக்கு இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முயல வேண்டும் என்றும் தெரிவித்தார்.

காஷ்மீர் வன்முறைக்கு பாகிஸ்தான் காரணம் என இந்தியாவும், பலூசிஸ்தான் வன்முறைக்குக் காரணம் இந்தியா என பாகிஸ்தானும் பரஸ்பரம் தொடர்ந்து குற்றம்சாட்டி வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

தீர்வு காண்பதற்கான முயற்சிகளில், இந்தியா ஓர் அடி எடுத்து வைத்தால் தாங்கள் இரண்டு அடி எடுத்து வைக்கத் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானுடன் திறந்த எல்லையைப் பேண வேண்டும் என்ற விருப்பத்தையும் அவர் வெளியிட்டார்.

அமெரிக்காவுடன் சீரான உறவைப் பேணுவதற்கு தாம் விரும்பம் கொண்டுள்ளதாக கூறிய இம்ரான் அமெரிக்காவிடமிருந்து உதவிகளை எதிர்பார்ப்பதை விட, அண்டை நாடுகளுடன் உறவை பலப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டார்.

பிரதமர் இல்லத்தில் குடியேற மாட்டேன்

பிரதமருக்கான இல்லம், மிகப்பெரும் பரப்பில் உள்ள நிலையில், அந்த வீட்டை தான் பயன்படுத்தப் போவதில்லை என்றும் அமைச்சர்களுக்கான குடியிருப்புப் பகுதியில்தான் பிரதமர் என்ற வகையில் தானும் இருக்கப் போவதாகவும் தெரிவித்தார்.

மாறாக, தற்போதுள்ள பிரதமரின் இல்லத்தை ஒரு கல்வி நிறுவனமாக மாற்ற முயற்சி எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

நாட்டில் வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் இளைஞர்களுக்கான புதிய வேலைவாய்ப்புக்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இம்ரான்கான் உறுதியளித்துள்ளார்.

(TAMIL NEWS pakistan election imran khan open talk live)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites