வருட இறுதிக்குள் சென்னை , திருச்சியிலிருந்து பலாலிக்கு விமான சேவை!

0
890

வடக்கிற்கான பயணத்தை மேற்கொண்டிருந்த சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்துவுக்கும் இடையில் நேற்று யாழ்ப்பாணத்தில் முக்கிய பேச்சுவார்த்தை இடம்பெற்றது. Chennai Trichy To Palaly Flight Service Begin Soon

நடந்த உயர்மட்டப் பேச்சுக்களின் போது, பலாலி விமான நிலையத்தை இந்தியாவின் உதவியுடன், பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கும், இவ்வாண்டு இறுதிக்குள் பலாலிக்கான அனைத்துலக விமான சேவையை ஆரம்பிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளும், சிறிலங்கா படை அதிகாரிகளும் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்,

பலாலி விமான நிலையத்தைப் பிராந்திய விமான நிலையமாக விரிவுபடுத்துவதற்கு இந்தியா இணங்கியுள்ளது. இதற்கமைய, பலாலி விமான நிலையம் தொடர்பாக ஆராய்வதற்கு, இந்திய நிபுணர் குழுவொன்று, உடனடியாக வரவுள்ளது.

இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவிலிருந்து முதலாவது அனைத்துலக விமானத்தை, பலாலியில் தரையிறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளன. அனைத்துலக விமானங்களின் வருகையை உறுதிப்படுத்துவதற்கான தொலைத்தொடர்பு சாதனங்களை பொருத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதற்கான பணிகள் மிகவிரைவில் ஆரம்பிக்கப்படும்.

திருச்சி, சென்னை விமான நிலையங்களிலிருந்து, முதற்கட்டமாக, பலாலிக்கான விமானச் சேவைகள் ஆரம்பிக்கப்படும், விமானப் போக்குவரத்து நடைபெறும்போதே, பலாலி விமான நிலைய ஓடுபாதைகள் மற்றும் விரிவாக்கப் பணிகள் இடம்பெறும் என கூறியுள்ளார்.

மேலும் இந்திய விமானச் சேவையை, உடனடியாக ஆரம்பிப்பதே திட்டம். இது, இந்த ஆண்டு இறுதிக்குள் சாத்தியமாகும் என சுமந்திரன் உறுதியளித்துள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites