புலித் தலைவர்களும், புலிகளின் விமானிகளும் தப்பிச் சென்றுள்ளனர் : பேட்டியில் கோத்தபாய தெரிவிப்பு

0
6107
Gotabaya Rajapaksa war interview

விடுதலைப் புலிகளின் முக்கியத் தலைவர்கள் பலரும், புலிகளின் அனைத்து விமானிகளும் எம்மிடம் சரணடையாது நாட்டைவிட்டு தப்பிச் சென்றுள்ளனர் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கியுள்ள விசேட செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர்,

வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த புலித் தலைவர்களை சுட்டு கொலை செய்தீர்களா?
இது முற்று முழுதான பொய்யான ஒரு குற்றச்சாட்டாகும். யுத்தம் முடிவடைய ஒரு தினத்துக்கு முன்பாக அப்போதைய இலங்கைக்கான நோர்வே தூதுவர் என்னைத் தொடர்புகொண்டு, 50 பேர் கொண்ட குழுவினர் சரணடைய இருப்பதாக கூறினார்.

இதனை சிறிது நேரத்தில் உறுதிப்படுத்துகிறேன் என கூறி தொலைபேசி அழைப்பை துண்டித்தார்.
பின்னர் மீண்டும் தொலைபேசி அழைப்பின் மூலம், சரணடைய இருந்த அந்த குழுவினரை தொடர்புகொள்ள முடியாமல் போய்விட்டது என என்னிடம் தூதுவர் கூறினார்.

தற்போது அவர் கூட இந்த விடயங்களை வெளியில் கூறாமல் அமைதியாக இருக்கின்றார்.

எனினும் எந்த யுத்த கள அறிவும் இல்லாதவர்களே இந்த குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள்.

அதாவது யுத்தக் களத்தில் யுத்தம் செய்துக்கொண்டிருக்கும் சாதாரண இராணுவ சிப்பாய் ஒருவரால் புலிகளின் நடேசன் சரணடைய வருகின்றார் என்பதை அறிந்து கொள்ள முடியுமா? இருளில் வெள்ளைக் கொடி ஏந்தி வந்தாலும் தெரியுமா? பொதுமக்களுடன் வரும் போது நடேசன் தான் வருகின்றார் என எவ்வாறு அடையாளம் காண முடியும்.

சதாரணமான ஒரு சிப்பாய்க்கு புலிகளின் நடேசனின் பெயரை தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் அவரின் முகத்தை ஞாபகத்தில் வைத்திருக்க முடியாது.

ஆனால் சரணடைந்தவர்கள் கொல்லப்பட்டார்கள் என்பதற்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை.
அவ்வாறு சரணடைய வருபவர்கள் அவர்களின் உயிரை பாதுகாக்க வேண்டுமெனில் பல யுக்திகளை கையாண்டு இருக்கலாம்.
யுத்தக் களத்தில் புலித் தலைவர்களை இராணுவ வீரர்கள் உடனடியாக அடையாளம் காண வாய்ப்பில்லை. வேண்டுமென்றால் பிரபாகரனை அடையாளம் காண முடியும்.

ஏனையவர்களின் தொடர்பில் புகைப்படங்கள் கூட எம்மிடம் இருக்கவில்லை.

பொட்டு அம்மான் இன்று இந்த கொழும்பு நகரில் நடந்து சென்றால் கூட எம்மால் அடையாளம் காண முடியாது.
யுத்தக் களத்தில் இருப்பது சாதாரண இராணுவ வீரர்கள். அந்த இராணுவ வீரர்களுக்கு புலித் தலைவர்களை அடையாளம் காண முடியாது.

பெயர்களை கேள்விப்பட்டிருந்தாலும் அவர்களின் உருவம் தெரியாது.

எனவே சரணடைய வந்தவர்களை சுற்றுக்கொண்டோம் என கூறுவது முற்றுமுழுதான பொய்யான குற்றச்சாட்டாகும்.

அவர்கள் உயிரை பாதுகாக்க நினைத்தால் பொதுமக்களுடன் கலந்து வந்திருக்கலாம்.

இதேபோன்று அவ்வாறு பொதுமக்களுடன் வந்த பல புலித் தலைவர்கள் எம்மிடம் சரணடையாது இந்தியாவுக்கு தப்பிச் சென்று அங்கிருந்து மேற்குலக நாடுகளுக்கு சென்றுள்ளனர்.

புலித் தலைவர்கள் தப்பிச் சென்றுள்ளனரா?
ஆம். புலித் தலைவர்கள் பலர் தப்பிச் சென்றுள்ளனர். புலிகளிடம் விமானப் படை பிரிவு இருந்தது. விமானிகளும் அவர்களிடம் இருந்தனர். எமது இராணுவம் எத்தனை புலி விமானிகளை பிடித்தது. ஒருவரைக் கூட பிடிக்க முடியாமல் போய்விட்டது.

பிரபாகரனுடன் பல விமானிகள் புகைப்படம் எடுத்திருந்தனர். அது பிரபலமான புகைப்படமாகும். அவர்கள் இன்று வெளிநாடுகளில் இருக்கின்றனர்.

குறிப்பாக பிரபாகரனின் தந்தை மற்றும் தாயை நாங்கள் மீட்டெத்தோம். சூசையின் மனைவியை நடுக்கடலில் வைத்து பிடித்தோம். அவர் சூசையின் மனைவி என கூறிய பின்னரே எமக்கு தெரிய வந்தது. அவர் தற்போது வெளிநாட்டில் இருக்கின்றார்.

இதைப்பற்றி யாரும் பேசுவதாக இல்லை. ஆனால் நடக்காத விடயங்களை பேசிக்கொண்டிருக்கின்றார்கள் என்றார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites