“கௌரவ பிரச்சனையாக எடுக்காமல் மக்கள் நலனுக்காக சிந்திக்க வேண்டும்” டெனிசுக்கு சிவாஜிலிங்கம் அறிவுரை!

0
427
North Provincial Council Sivajilingam Advices Deniswaran

பதவிக் கதிரையையோ அல்லது கொடுப்பனவையோ எதிர்பார்த்து கௌரவப்பிரச்சனையாக இதனைப் பார்க்காமல் மக்கள் நலனுக்காக செயற்பட டெனீஸ்வரன் முன்வர வேண்டுமென சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். North Provincial Council Sivajilingam Advices Deniswaran

வடக்கு மாகாண சபை அமர்வு பேரவைச் செயலக சபா மண்டபத்தில் சபைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இதன் போது கருத்து வெளியிடுகையிலையே சிவாஜிலிங்கம் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்..

டெனீஸ்வரனின் அமைச்சர் விவகாரத்தில் மேல் நீதிமன்றம் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அந்த தடை உத்தரவுக்கு எதிராக முதலமைச்சரால் ரீட் மனுத் தாக்கல் செய்யப்பட்டதையடுத்து இரண்டு வார கால அவகாசம் தற்போது வழங்கப்பட்டிருக்கிறது. இதற்கான தீர்ப்பு கிடைக்கலாம் கிடைக்காமலும் விடலாம்.

இலங்கையினுடைய உயர் நீதிமன்றம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினுடைய நடவடிக்கைகளைப் பற்றி நாங்கள் இதிலே விவாதிக்க முடியாது. கருத்துச் சொல்லவும் நாங்கள் விரும்பவில்லை. ஆனால் இலங்கை அரசாங்கத்தினுடைய அரசியலமைப்பிற்கு கீழே நீதித்துறை எவ்வளவு கேவலமாக நடந்து கொண்டிருந்தது என்பதை பல விடயங்களுடாக எங்காளால் சொல்ல முடியும்.

இதன் போது குறிக்கிட்ட உறுப்பினரும் சட்டத்தரணியுமான சேவன் சயந்தன் நீதித்துறையை அவ்விதமாக குறிப்பிடுவதை சபை நடவடிக்கைகளில் நீங்கள் எவ்விதமாக எடுக்கப் போகிறீர்கள் என்பது எனக்குத் தெயாது என்று கூறியிருந்தார். இதற்குப் பதிலளித்துக் கொண்டு தனது உரையைத் தொடங்கிய சிவாஜிலிங்கம் நடவடிக்கை எடுங்கள், நான் சிறை செல்லவும் தயார். கடந்த காலத்தில் நீதிமன்றிலே மிக கேவலமாக உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் நீக்கப்பட்டிருந்தார். அவர் நீக்கப்பட்டது தவறு என்று சொன்னது எல்லாம் வரலாறு.

அரசியலமைப்பிலே மிக பாரதூரமான நிலைக்கு இந்த இடைக்கால தீர்ப்பு இன்றைக்க இட்டுச் சென்றிருக்கின்றது. டெனீஸ்வரன் அவர்கள் தான் பதவி நீக்கப்பட்டது தவறு என்று சொல்லியிருந்தால் அவர் கட்சிக்குத் தெரியப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் இன்றை வரையில் அவர் இது குறித்து கட்சிக்கு தெரியப்படுத்தவே இல்லை.

அவர் தமிழீழ விடுதலை இயக்கத்தின் சார்பிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிட்டே சபைக்கு வந்திருக்கிறார். ஆனால் அவர் சார்ந்திருக்கின்ற கட்சி அவரைப் பரிந்துரைக்காத போதும் முதலமைச்சர் அவரை அமைச்சராக நியமித்திருந்தார். ஆனால் இன்றைக்கு அவர் சார்ந்திருக்கின்ற கட்சி அவரை மூன்று வருடங்களுக்கு கட்சியிலிருந்த இடை நிறுத்தியிருக்கின்றது.

ஆகவே இதிலே எமது கட்சிக்கு எந்தவித உடன்பாடும் கிடையாது. எங்களைப் பொறுத்தவரையில் முதலமைச்சரிடம் பொறுப்பை நாங்கள் கொடுத்திருக்கிறோம் என்றால் அவர் அவருடைய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். அதிலே நாங்கள் ஒரு நாளும் குழப்பத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் நீங்கள் இன்றைக்கு கௌரவப் பிரச்சனையாக இதனைப் பார்த்து மாகாண சபையின் அதிகாரப் பகிர்வை கேள்விக் குறியாக்கியிருக்கின்றீர்கள்.

ஆனால் 24 மணி நேரத்தில் ஒரு அமைச்சரை நியமிக்கவோ அல்லது நீக்குவதற்கோ முதலமைச்சருக்கு அதிகாரம் இருக்கிறது. அதற்கு ஒரு சிபார்சை முதலமைச்சர் ஆளுநருக்கு செய்தால் நிச்சயமாக அமைச்சரை நீக்க முடியும். ஆனால் அதிலே நீங்கள் ஒரு கௌரவப் பிரச்சனையாகவோ அல்லது இந்த இடைப்பட்ட காலத்திற்கான சம்பளக் கொடுப்பனவோ அல்லது ஏனைய கொடுப்பனவுகளையோ எதிர்பார்த்து இதனைக் கொளரவப் பிரச்சனையாக எடுக்காமல் தான் சார்ந்த மக்கள் நலனுக்காக செயற்பட வேண்டும்.

மேலும் இதில் நாங்கள் கௌரவப் பிரச்சனையாக எடுத்துக் கொண்டிருந்தால் தெற்கிலே அதிகாரப் பகிர்வில் இவர்களைப் போல மோசமானவர்கள் இல்லை என்ற கருத்தே ஏற்படுமென்பதையும் கூறிக் கொள்கிறேன்.

முதலமைச்சர் உள்ளிட்ட புதிதாக நியமிக்கப்பட்ட நான்கு அமைச்சர்கள் இருக்கின்றனர். ஆகையினால் இப்போது எத்தனை அமைச்சுக்கள் என்று கேள்விகள் கேட்காமல் நாங்கள் அடுத்த கூத்து தெருக்கூத்தா அல்லது வேறு என்ன கூத்து என்று நாங்கள் நடத்திக் காட்டுவோம் என்றார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை