ஜாமீனில் வெளியே சுற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள்- ஜெய்ப்பூர் கூட்டத்தில் மோடி

0
454
addressed gathering senior leaders Congressparty indiatamilnews

addressed gathering senior leaders Congressparty indiatamilnews

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ஜாமீனில் வெளியே வந்து சுற்றுவதாக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் வசுந்தரா ராஜே சிந்தியா தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில், 2 ஆயிரத்து 100 கோடி மதிப்புடைய 13 நகர்ப்புற உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும், பொதுக் கூட்டத்தில் உரையாற்றவும் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஜெய்ப்பூர் சென்றார்.

அம்மாநிலத்தை சேர்ந்த  சுமார் 2.5 லட்சம் பேர் வரை மத்திய மற்றும் மாநில அரசின் நலத் திட்டங்கள் மூலம் பயனடைந்திருப்பதாக சமீபத்தில் வெளியான பொது நிர்வாகத்துறை வெளியிட்ட அறிக்கை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஜெய்ப்பூரில் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய மோடி, ஜெய்ப்பூர் நகரில் உள்ள அமருதன் கா பாக் மைதானத்தில் கூடியிருந்த மத்திய மற்றும் மாநில அரசுகளின் நலத் திட்டங்களால் பலனடைந்தவர்கள் முன்னிலையில் உரை நிகழ்த்தினார். அதில், அவர் குறிப்பிட்டுள்ளதாவது.

“ராஜஸ்தான் மாநில முதல்வராக வசுந்தரா ராஜே சிந்தியா கடந்த 2013-ம் ஆண்டு பதவியேற்றதை மறந்துவிடாதீர்கள். அவர் பதவியேற்றபோது மாநிலம் மிகவும் மோசமான நிலையில் இருந்தது. அவற்றை எல்லாம் சீர்திருத்தி முதல்வர் சிந்தியா மாநில அரசின் செயல்பாட்டு முறையை சிறப்பாக மாற்றியமைத்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள் அனைவரும் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றுக்கொண்டு வெளியில் உலவுகின்றனர். அவர்கனைப் பார்த்து ஜாமீன் கட்சிக்காரர்கள் என மக்கள் விமர்சிக்கிறார்கள்.

ஆனால், நாங்கள் காங்கிரஸை போன்று ஊழலை பார்த்து சகித்துக் கொண்டிருக்க மாட்டோம், புதிய இந்தியாவை உருவாக்குவதே எங்கள் லட்சியம். பா.ஜ.க.விற்கு ஒரே நோக்கம் உள்ளது எனில் அது நாட்டின் வளர்ச்சி மட்டுமே.

ராணுவத்தினரின் திறன் மற்றும் செயல்பாடுகளை எதிர்க்கட்சியினர் கேள்வி கேட்டு விமர்சிக்கின்றனர். அவர்களை இந்திய மக்கள் என்றும் மன்னிக்க மாட்டார்கள்.

ராஜஸ்தான் மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள நலத்திட்டங்களை பற்றி குறை கூறுபவர்கள் இங்கு அமர்ந்திருக்கும் பயனாளிகளின் முகத்தில் உள்ள புன்னகையை பார்த்தால் உண்மை நிலையை புரிந்துகொள்வார்கள்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் 5 கோடி மக்கள் வறுமையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. உஜ்வாலா திட்டத்தின் கீழ் 33 லட்சம் பேர் இலவச கேஸ் இணைப்பு பெற்றுள்ளனர்.

70 ஆண்டினை ராஜஸ்தான் அடுத்த ஆண்டு நிறைவு செய்கிறது. எனவே அடுத்த ஆண்டு, புதிய இந்தியாவை கட்டியெழுப்புவதில் முக்கிய பங்காற்றும் விதமாக அனைத்து துறைகளிலும் வளர்ச்சியடைந்த ராஜஸ்தான் மாநிலமாக உருவாக்க அனைவரும் உறுதியேற்போம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பிரதமரின் வருகையையொட்டி ஜெய்ப்பூர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

addressed gathering senior leaders Congressparty indiatamilnews

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :