வன ஜீவராசிகள் திணைக்களத்தின் செயற்பாடு தமிழ் மக்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்கி உள்ளது

0
537
facing serious allegation activities Department Mullaitivu District

(facing serious allegation activities Department Mullaitivu District)

முல்லைத்தீவு மாவட்டத்தில் வன ஜீவராசிகள் திணைக்களத்தின் நடவடிக்கைகள் தமிழ் மக்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்கும் வகையில் அமைந்திருப்பதாக வடமாகாண சபையில் இன்று கடுமையான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருக்கின்றது.

வடமாகாண சபையின் 125 வது அமர்வு இன்று பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது.

இதன்போதே, மேற்படி விடயத்திற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. மேலும் இந்த விடயம் தொடர்பாக சபையில் விவாதம் இடம்பெற்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் வன வள பாதுகாப்பு திணைக்களம், வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம், இராணுவம், அரச காணிகள், என ஒட்டுமொத்தமாக முல்லைத்தீவு மாவட்டத்தின் நிலப்பகுதி மத்திய அரசாங்கத்தின் கைகளுக்குள் இருந்து கொண்டிருக்கின்றது.

மாகாண சபைக்குரிய நிலம் ஒரு ஹெக்ரயரும் கூட இல்லை. இந்த நிலையில் மத்திய அரசாங்கத்தின் இத்தகைய செயற்பாடுகள் தொடர்பாக மத்திய அரசாங்கத்திற்கும் சர்வதேச நாடுகளினதும் கவனத்திற்கு கொண்டு செல்லவேண்டிய நிலை உருவாகியிருப்பதாக சுட்டிக்காட்டிய உறுப்பினர்கள், வடமாகாணசபையின் இந்த பிரேரணையை சகல நாடுகளினதும் தூதுவராலயங்களுக்கு அனுப்பிவைக்க வேண்டும்.

அதேபோல் வடமாகாண சபை உறுப்பினர்கள் குழு சகல நாடுகளினதும் தூதுவராலயங்களுக்கும் சென்று உண்மை நிலையை வெளிப்படுத்த வேண்டும்.

மேலும் இலங்கையில் 28 வீதமாக உள்ள வனப்பகுதியை 35 வீதமாக அதிகரிப்பதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

ஆனால் அது இலங்கையில் உள்ள 9 மாகாணங்களிலும் சரியாக பங்கிட்டு செய்யப்பட வேண்டும்.

வடமாகாணத்தினை மட்டும் வனப்பகுதியாக மாற்ற இயலாது. குறிப்பாக கேகாலை மாவட்டத்தில் மின் உற்பத்தி நிலையம் ஒன்றை ஆரம்பிக்கும் அரசாங்கம் அங்குள்ள மக்களிடமிருந்து பெறும் காணிகளுக்கு மாற்றிடாக வவுனியாவில் காணிகளை வழங்குகின்றது.

கேகாலை மாவட்டத்தில் உள்ளவ ருக்கும், வவுனியாவுக்கும் என்ன சம்மந்தம்?

மேலும் இரணைமடு குளத்திற்கு பின்புறமாக பெரிய காட்டுக்குள் இராணுவம் விமான ஓடுதளங்களை அமைத்து முகாம்களை அமைத்து வாழ்ந்து கொண்டிருக்கின்றது.

அதேபோல் கேப்பாபிலவு காட்டுக்குள் இராணுவம் விமான ஓடுபாதைகளையும் முகாம்களையும் அமைத்துக் கொண்டிருக்கின்றது.

அவற்றை அங்கிருந்து அகற்றுவதற்கு இயலாத அரசாங்கம் மக்களுடைய குடியிருப்புக்களை வன பகுதிகளாக அடையாளப்படுத்திக் கொண்டிருக்கின்றது.

தொடர்ந்து கருத்து தெரிவித்த மாகாண சபை உறுப்பினர் கே.சயந்தன் கூறுகையில், வன வளம் என்பது மத்திய அரசுக்கும், மாகாண சபைக்குமான ஒருங்கிய நிரலில் உள்ள விடயதானங்களாகும்.

ஆகவே அந்த ஒருங்கிய நிரலில் உள்ள விடயதானத்துக்காக வட மாகாண சபை உருவாக்கிய நியதிச் சட்டம் எங்கே? அரசியலமைப்பின்படி ஒரு மாகாணத்தின் குடிப்பரம்பலை மாற்றும் வகையில் குடியேற்றங்களை செய்ய இயலாது.

அவ்வாறு செய்துள்ளமைக்காக யார் வழக்கு தாக்கல் செய்தீர்கள்? மேலும் காணி பிரச்சினைகளில் பல்வேறு வகையான காணி பிரச்சினைகள் உள்ளன.

குறிப்பாக இராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் அரச காணிகள், உயர்பாதுகாப்பு வலய காணிகள், குடியேற்றங்களால் அபகரிக்கப்பட்டிருக்கும் காணிகள் என பல வகையாக உள்ளது.

இவை தொடர்பாக பேசாமல் வன வளத்தை பாதுகாப்பதற்காக நாங்கள் வெளிநாட்டு தூதுவராலயங்களுக்கு செல்வது அழகல்ல என்றார்.

இதனை தொடர்ந்து கருத்து தெரிவித்த அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம், பிரேரணையில் குறிப்பிட்டுள்ளவாறு ஜனாதிபதி, மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த தீர்மானம் அனுப்பிவைக்கப்படவுள்ளது.

முன்னதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், மாகாணசபை உறுப்பினர்களுக்குமிடையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் நில பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல்கள் நடைபெற்று அதற்கான செயலணி ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.

அந்த செயலணியிலும் இந்த விடயம் தொடர்பாக பேசுவதென தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதுடன், பிரேரணை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

(facing serious allegation activities Department Mullaitivu District)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites