ஈராக் தேர்தல் முடிவில் நீடிக்கும் குழப்பம்- மறு வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட்டது பாராளுமன்றம்

0
469
chaos lasts Iraq election parliament ordered the re vote count

chaos lasts Iraq election parliament ordered the re vote count

ஈராக் நாட்டில் தேர்தல் முறைகேடு புகார்கள், ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான உள்நாட்டுப் போர் என பலமுறை பிரச்சினைகளுக்கு மத்தியில் கடந்த மே மாதம் 12-ம் தேதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. பிரதமர் ஹைதர் அல் அபாதி மற்றும் முன்னாள் பிரதமர் நூரி அல்-மாலிக்கி இடையில் இந்த தேர்தலில் பலத்த போட்டி நிலவியது.

18 மாகாணங்களில் 329 பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்காக நடத்தப்பட்ட இந்த தேர்தலில் முதல் முறையாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சோதனை முனையில் பயன்படுத்தப்பட்டன. கடந்த தேர்தல்களை விட இந்த தேர்தலில் வாக்குப் பதிவு மிகக் குறைவாக (44.5 சதவீதம்) பதிவாகியிருந்தது.

பின்னர் வாக்குகள் எண்ணப்பட்டபோது, பிரதமரின் ஹைதர் அலி அபாதி பின்னடைவை சந்தித்தார். ஷியா மதகுரு முக்ததா அல் சத்ர் தலைமையிலான கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றியது. ஆட்சியமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டது. அபாதியின் ஆளும் கூட்டணி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.

ஆனால், தேர்தல் நடைமுறைகளில் முறைகேடுகள் நடந்திருப்பதாக ஆளும் தரப்பினர் குற்றம்சாட்ட, இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது. இதையடுத்து முறைகேடுகள் குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையம் சார்பில் ஒரு கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த கமிஷன் விசாரணை நடத்தி, 1000க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளின் வாக்கு எண்ணிக்கையை செல்லாது என அறிவித்தது. எனினும் ஆளும் தரப்பினர் இதனை ஏற்க மறுத்தது.

இவ்வாறு பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில், வாக்குகளை எந்திரங்கள் மூலம் எண்ணாமல், நேரடியாக கைகளால் எண்ணும் வகையில் தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. இதற்கான சட்டமசோதா பாராளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, வாக்குகள் அனைத்தையும் கைகளால் எண்ண வேண்டும் என பாராளுமன்றம் உத்தரவிட்டது.

மேலும் தேர்தல் ஆணையம் நியமித்த 9 நபர் கொண்ட கமிஷனும் ரத்து செய்யப்பட்டு, அவர்களுக்கு பதிலாக வாக்கு எண்ணிக்கையை மேற்பார்வையிட நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மறு வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட்டிருப்பது, மதகுரு முக்ததா அல் சத்ர் ஆதரவாளர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர்களை அமைதி காக்கும்படி சத்ர் கூறியுள்ளார்.

இத்தனை கெடுபிடிகள் செய்தாலும்கூட தேர்தல் முடிவுகளில் பெரிய அளவில் வித்தியாசம் வரப்போவதில்லை, வேட்பாளர்களின் வாக்கு வித்தியாசம் வேண்டுமானால் மாறலாம் என்றே வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து வெற்றி நிலவரம் தெரிய இன்னும் சில காலம் பிடிக்கும் என்பதால், அதுவரையில் காபந்து பிரதமராக அபாதி நீடிப்பார்

chaos lasts Iraq election parliament ordered the re vote count