பொது பல சேனா சிங்கள பௌத்த இனத்துவ மேலாதிக்கத்தை ஊக்குவித்து வருகின்றது : அமெரிக்கா குற்றச்சாட்டு

0
597
minority attack continues sri lanka usa blames

(minority attack continues sri lanka usa blames)
இலங்கையின் அரசியலமைப்பில் விரும்பிய மதத்தை பின்பற்றும் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ள போதிலும், 2017ஆம் ஆண்டிலும், மத சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெற்றதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள, அனைத்துலக மத சுதந்திரம் தொடர்பான, 2017ஆம் ஆண்டுக்கான அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

இலங்கையின் தேசிய கிறிஸ்தவ இவாஞ்சலிக்கல் கூட்டணியின் ஆவணங்களின்படி, தேவாலயங்கள், கிறிஸ்தவ மதகுருமாருக்கு எதிரான தாக்குதல்கள், வழிபாட்டு இடங்களுக்கு தடை ஏற்படுத்தல் போன்ற 97 சம்பவங்கள் கடந்த ஆண்டில் இடம்பெற்றதாகவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் கடந்த ஆண்டு ரம்ழான் நோன்புக் காலத்திலும் ஏனைய சந்தர்ப்பங்களிலும், பள்ளிவாசல்கள் மற்றும் வழிபாட்டு இடங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்ட பல சம்பவங்கள் தொடர்பாக இலங்கை முஸ்லிம் சபை அறிக்கையிட்டுள்ளது என்றும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“பொது பல சேனா போன்ற பௌத்த தேசியவாத அமைப்புகள் தொடர்ச்சியாக சிங்கள பௌத்த இனத்துவ மேலாதிக்கத்தை ஊக்குவித்து வருவதுடன், மத, இன சிறுபான்மையினரை- குறிப்பாக சமூக ஊடகங்களின் மூலம், சிறுமைப்படுத்தும் செயலையும் மேற்கொண்டு வருகின்றன.

மத சிறுபான்மையினர் உடல் ரீதியாக தாக்கப்பட்ட, அவர்களின் வழிபாட்டு இடங்கள் தாக்கப்பட்ட சில சம்பவங்களில் அரசாங்க அதிகாரிகள் உடந்தையாக இருந்தனர் என்றும் சில அறிக்கைகள் கூறுகின்றன.

கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட பல தாக்குதல்களுக்கு எதிராக உள்ளூர் அதிகாரிகள் மற்றும் பொலிஸார் குறைந்தபட்ச நடவடிக்கைகளையே எடுத்தனர் அல்லது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தேசிய நல்லிணக்கச் செயல்முறைகளுக்கு மத சிறுபான்மையினர் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் என்றும், எனவே மத சிறுபான்மையினரைப் பாதுகாக்குமாறும், அனைவருக்குமான மத சுதந்திரத்தை பாதுகாக்குமாறும் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசியல் தலைவர்களைச் சந்திக்கின்ற போதெல்லாம், அமெரிக்கத் தூதுவர் திரும்பத் திரும்ப வலியுறுத்தி வந்திருக்கிறார்“ என்றும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :