கிரிக்கெட் வீரர் தந்தை படுகொலை, பழிவாங்கப்பட்ட குடும்பம் : அதிர்ச்சி பின்னணி

0
829
dhananjaya silva father murder reason

(dhananjaya silva father murder reason)
இலங்கை கிரிக்கட் அணியின் துடுப்பாட்ட வீரர் தனஞ்சய டீ சில்வாவின் தந்தை, ரஞ்சன் டீ சில்வா நேற்று முன்தினம் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சில அதிர்ச்சி தகவல்கள் கசிந்துள்ளன.

இரத்மலானை ஞானேந்தர வீதியில் நேற்று முன்தினம் இரவு சுட்டுகொலை செய்யப்பட்ட கிரிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தையும், கல்கிசை மாநாகர சபை உறுப்பினருமான கே. ரஞ்சன் டி சில்வாவின் கொலையானது வேனில் வந்த அடையாளம் தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த துப்பாக்கி சூட்டில் காயமடைந்துள்ள தனஞ்சய டி சில்வாவின் தந்தையின் நண்பர்கள் இருவர், களுபோவில வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதோடு அவர்கள் கவலைக்கிடமாக இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் தனஞ்சய டி சில்வாவின் தந்தை தனது நண்பர்களுடன் தனது வீட்டு முற்றத்தில் பேசிகொண்டிருந்துள்ளார்.

இதன்போது வேனில் வந்த இனந்தெரியாத நபர்கள், ரீ-56ரக துப்பாக்கியால் ரஞ்சன் டி சில்வா மீது சரமாரியாக துப்பாக்கி தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது அருகில் இருந்த நண்பர்களும் படுகாயமடைந்துள்ளனர்.

ரஞ்சன் டி சில்வாவின் உடலை 12 துப்பாக்கி சன்னங்கள் துளைத்துள்ளன. இந்நிலையில் அவர் வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

பழிவாங்கப்பட்ட குடும்பம்

கிரிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வா வசிக்கும் இரத்மலானை ஞானேந்தர வீதியில் உள்ள பிரதேசத்தில் பாதாள உலக குழுவினரால் குடு வியாபாரம் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த, கிரிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் குடும்பத்தினர், இதுதொடர்பில் பொலிஸ் நிலையத்திலும் முறையிட்டுள்ளனர்.

இதனையடுத்து பாதாள உலக உறுப்பினர்களால் குடு வியாபாரத்தை சரியான முறையில் முன்னெடுக்க முடியாமல் போயுள்ளது.

இதற்கு காரணமாக இருந்த கிரிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வா குடும்பத்தை பழிவாங்கும் நோக்கில் முதல் முறை கிரிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் சகோதரனை கொலை செய்ய பாதாள உலக உறுப்பினர்கள் திட்டமிட்டுள்ளனர்.

எனினும் ஒருமுறை அவர் பாதாள உலக உறுப்பினர்களின் தாக்குதலிருந்து உயிர் தப்பியுள்ளார்.
இந்நிலையிலேயே கிரிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தையை நேற்று முன்தினம் கொலை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுவேளை இந்த சம்பவம் தொடர்பில் 4 விசேட பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளன.
மேலும் கே.ரஞ்சன் டி சில்வாவின் வீட்டுக்கு செல்லும் வழியலுள்ள அனைத்து சி.சி.டி.வி கமராக்களின் காட்சி பதிவுகளையும் ஆய்வுக்கு உட்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

 

Time Tamil News Group websites :