இவ்வாரம் பிரதமர் முடிவை அறிவிப்பார் : சபாநாயகர்

0
669
provincial election decision karu jayasuriya

(provincial election decision karu jayasuriya)
மாகாண சபைத் தேர்தலுக்கான எல்லை நிர்ணய அறிக்கை தொடர்பில் சுதந்திரக் கட்சியுடன் பேசி இந்த வாரத்தினுள் பிரதமர் முடிவு அறிவிக்க இருப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய பராளுமன்றத்தில் தெரிவித்தார்.பிரதமரின் முடிவை அடுத்த கூட்டத்தில் அறிவிப்பதாகவும் சபாநாயகர் குறிப்பிட்டார்.

மாகாண சபை தேர்தல்கள் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருவது தொடர்பில் ஒன்றிணைந்த எதிரணி எம்.பிக்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலே சபாநாயகர் இதனை தெரிவித்தார்.

3 மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் 8 மாதங்கள் கடந்தும் இன்னும் நடைபெற வில்லை. மேலும் 3 மாகாண சபைகளின் காலம் நிறைவடைய இருக்கின்றன. கடந்த மார்ச் மாதத்தில் எல்லை நிர்ணய அறிக்கையை மாகாணசபைகள் அமைச்சர் சமர்ப்பித்திருந்தார். ஆனால் அரசாங்கம் தேர்தல் நடத்தாது காலங்கடத்தி வருகிறது என டளஸ் அலஹப்பெரும தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தல் சட்டம் கடந்த மாதத்தில் நிறைவேற்றப்பட்டு தேர்தல் நடந்தாலும் இந்த சட்டத்தை மாற்ற வேண்டும் என ஜனாதிபதி உட்பட பலரும் கூறியுள்ளனர்.

மாகாண சபை தேர்தல்களை ஒத்திவைக்க கூடாது என உச்ச நீதி மன்றதம் தீர்ப்பளித்துள்ளது.இருந்தும் அரசாங்கம் தொடர்ந்து தேர்தலை பின்போட்டு வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதற்குப்பதிலளித்த சபாநாயகர், இந்த விடயம் தொடர்பில் பிரதமருடன் பேசினேன். கட்சித் தலைவர் கூட்டங்களிலும் இது தொடர்பில் ஆராயப்பட்டன. சுதந்திரக் கட்சியுடன் பேச வேண்டியிருப்பதாக பிரதமர் அறிவித்துள்ளார். இந்த வாரத்தினுள் பிரதமர் இறுதி முடிவு வழங்குவார் என நம்புகிறேன் என்று கூறினார்.
அடுத்து எழுந்து நின்ற தினேஷ் குணவர்தன,

கடந்த மூன்று மாதமாக மாகாண சபை தேர்தல் குறித்து கட்சித் தலைவர் கூட்டத்தில் கோரி வருகிறேன். பிரதமர் ஒவ்வொரு நாள் அவகாசம் கேட்டு வருகிறார். சப்ரகமுவ மாகாண தேர்தல் தொடர்பில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் தேர்தலை ஒத்திவைக்க முடியாது என்று அறிவித்துள்ளது. உள்ளூராட்சி ​தேர்தல் சட்டமூலத்தில் பெண் பிரதிநிதித்துவ பிரச்சினையை காட்டி தேர்தல் முறையை அரசாங்கம் மாற்றியது. அரசாங்கம் அரசியலமைப்பை மீறி தேர்தலை பின்போட்டு வருகிறது. சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்றார்.

ஐ.தே.க வும் தேர்தலை ஒத்திவைப்பதற்கு இனங்கவில்லை என ராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன தெரிவித்தார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை