அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. ராஜேந்திரனை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: ஸ்டாலின்

0
436
Minister Vijayabaskar DGP gutka drug deal should dismissed

Minister Vijayabaskar DGP gutka drug deal should dismissed

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா போதைப் பொருள் விவகாரத்தில் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் டி.ஜி.பி. ராஜேந்திரனை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதவி நீக்கம் செய்ய வேண்டும் என தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கையில், “நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, குட்கா வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பினை வரவேற்கிறேன்.

மிகக்கொடிய நோயான புற்றுநோயை நுகர்வோரிடம் பரப்பும் குட்கா விற்பனை, அந்த விற்பனையை அனுமதித்ததில் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் பெற்ற இலஞ்சம் உட்பட பல அதிர்ச்சித் தகவல்கள் இந்த குட்கா விசாரணையில் வெளிவந்து. பலருடைய முகமூடியைக் கிழித்தெறியும் என்று நம்புகிறேன்.

இந்திய மத்திய அரசுக்கு 250 கோடி ரூபா வரி ஏய்ப்புக்கும் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் மீதான 40 கோடி ரூபா ஊழலுக்கும் வித்திட்ட குட்கா ஊழல் வழக்கை மதுரை உயர்நீதிமன்றக் கிளை முதலில் இலஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.

அந்த விசாரணையை தமிழக அரசு வேண்டுமென்றே முடக்கி வைத்தது. பிறகு மீண்டும் தி.மு.க. சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டு, சி.பி.ஐ. விசாரணை கோரியபோது அதற்கு ஒப்புக்கொள்ள அடியோடு மறுத்து தமிழக அரசு எவ்வளவோ வாதாடியது.

இறுதியில் தடை செய்யப்பட்ட குட்கா ஊழல் வழக்கினை விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு நல்ல தீர்ப்பு அளித்தது.

உயர் நீதிமன்றத் தீர்ப்பு வெளிவந்தும் தமிழக அரசு குட்கா ஊழல் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றவில்லை; திட்டமிட்டுத் தாமதித்தது. இந்த இடைவெளியில் தான், சுகாதாரத் துறையில் உள்ள சுகாதார ஆய்வாளர் பதவியிலிருக்கும் சிவக்குமார் என்பவரை சுகாதாரத் துறை அமைச்சரும் டி.ஜி.பி.யும் சேர்ந்து தங்களின் பினாமியாக்கி அதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் ஒத்துழைத்து உதவி செய்து உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மேன்முறையீட்டை விசாரித்த உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு, குட்கா ஊழல் வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கலாம் என்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது. அமைச்சர், டி.ஜி.பி., முதல்வர் ஆகியோர் குட்கா ஊழலை எப்படியாவது மூடி மறைத்து விடலாம் என்ற நப்பாசையில் எடுத்த முயற்சியை உயர்நீதிமன்றமே முறியடித்திருக்கிறது.

ஆகவே, குட்கா ஊழல் வழக்கை மேலும் தாமதம் செய்யாமல் உடனடியாக சி.பி.ஐ.க்கு தமிழக அரசு மாற்ற வேண்டும். சி.பி.ஐ. அதே முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் விசாரணையை மேற்கொள்ளாமல் வருமான வரித்துறை தமிழக அரசிடம் கொடுத்த குட்கா டைரியின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணையைத் துவக்க வேண்டும்.

சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் தமிழ்நாடு காவல்துறையின் சட்டம் – ஒழுங்கு டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் இருவரும் தொடர்ந்து இந்த குட்கா விசாரணைக்கு முட்டுக்கட்டைக்கு மேல் முட்டுக்கட்டைபோட்டு வருவதால், அவர்களை பதவியில் வைத்துக் கொண்டு சி.பி.ஐ. நேர்மையாக விசாரணை நடத்துவது உண்மைத் தகவல்களை வெளிக்கொண்டு வர நிச்சயம் உதவாது.

ஆகவே, முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக இருவரையும் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் அப்படி செய்யத் தவறினால், விசாரணை தடையின்றி நியாயமாக நடைபெற இவர்கள் இருவரையும் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று சி.பி.ஐ. அமைப்பு தமிழக அரசுக்குக் கடிதம் எழுத வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Minister Vijayabaskar DGP gutka drug deal should dismissed

More Tamil News

Tamil News Group websites :