காவிரி மேலாண்மை வழக்கில் மேலும் கால அவகாசம்!

0
668

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வழக்கில் தமிழக மக்களுக்கு எதிரான போக்கையே தொடர்ந்து இந்திய மத்திய அரசு கடைபிடித்து வருகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “காவிரி தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அமல்படுத்துவதில் கடுகளவும் அக்கறையின்றியே மத்திய பா.ஜ.க. அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. ஏற்கெனவே, தீர்ப்பை அமுல்படுத்த தீர்ப்பு வெளிவந்த நாளிலிருந்து மூன்று மாதம் அவகாசம் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்திருந்தது.

அது மட்டுமல்லாமல் ‘ஸ்கீம்’ என்றால் என்ன என்று விளக்கமும் கேட்டிருந்தது. இம்மனுவின் மீது உயர்நீதிமன்றம் எதிர்வரும் 3ஆம் திகதிக்குள் மத்திய அரசு ஒரு செயல்திட்டத்தை உருவாக்கி தாக்கல் செய்ய வேண்டுமென்று உத்தரவிட்டிருந்தது. இதுவே காலங்கடத்தும் நடவடிக்கை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் தமிழக மக்களும் எதிர்ப்பு தெரிவித்து பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், செயல்திட்டத்தை சமர்ப்பிக்கவே மேலும் இரண்டு வார காலம் அவகாசம் கேட்டு மத்திய அரசு இன்று மனு தாக்கல் செய்திருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. இச்செயல் மத்திய பா.ஜ.க. அரசின் தமிழக விரோதப் போக்கையே வெளிப்படுத்துகிறது.

இதனால் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு இழுத்தடிக்கப்பட்டு இந்த ஆண்டும் ஜூன் மாதம் தண்ணீர் திறப்பதற்கு வாய்ப்பில்லாத நிலையே ஏற்படும். எனவே,  தமிழக அரசு வேடிக்கை பார்க்காமல், கால அவகாசம் கோரும் மத்திய அரசின் மனுவை நிராகரிக்கத்தக்க வகையில் சட்டரீதியான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் மத்திய பா.ஜ.க. அரசின் இந்த தமிழகத்திற்கு விரோதமான போக்கை கண்டித்து தமிழக மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு கண்டன குரலெழுப்ப வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.