குரங்கணி காட்டுத் தீயின் கொடுமை; ஒரே பார்வையில்

(Tamil Nadu kurangani forest fire Nine dead 27 rescued)

அனுமதி பெறாமல் மலையேற்றப் பயிற்சிக்குச் சென்றமையினாலேயே இந்த துயரமான சம்பவம் ஏற்பட்டுள்ளதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

கோடை காலத்தில் காட்டுத் தீ பரவ வாய்ப்புள்ளமையினால் மலையேற அனுமதிப்பதில்லை என்றும் அரசின் அனுமதி பெற்றுச் சென்றால் தான் பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

குரங்கணி காட்டுத் தீயினால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண உதவியளிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் காட்டுத் தீக்கான காரணம் குறித்து விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, தேனி மாவட்டம் போடி அருகே மலை ஏறும் பயிற்சிக்காக சென்ற 36 பேர் காட்டுத் தீயில் சிக்கிக்கொண்டமை தமிழகம் முழுக்க வேதனையும் அதிர்ச்சியும் உண்டாக்கி உள்ளது.

மலையேறச் சென்ற 36 பேரில் 9 உயிரிழந்து விட்டதாக அதிகாரபூர்வமாக தேனி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து கேள்விப்பட்டதில் இருந்தே பலரும் தங்கள் வேதனையை வெளிபடுத்தி வரும் நிலையில், வைரமுத்துயும் இதுகுறித்து தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் ‘உயிர் வலிக்கிறது’ என்கிற தலைப்பில் பதிவிட்டுள்ளார்.

அதில் ‘உயிர் வலிக்கிறது உயிர் வலிக்கிறது ஊரே அழுகிறது. காட்டுத்தீயில் கருகிய தங்கங்கள் மீது கண்ணீர் சொரிகிறேன். காயப்பட்டவர்கள் பிழைக்க வேண்டுமே என்று பேராசை கொள்கிறேன். பெற்றோர் நிலையில் நின்று பெருவலி உணர்கிறேன்.

‘சாவே உனக்கொருநாள் சாவு வந்து சேராதேர் தீயே உனக்கொருநாள் தீமூட்டிப் பாரோமோ’ என்ற கண்ணதாசன் வரிகளைக் கடன்வாங்கிக் கலங்குகிறேன்.

இந்த விபத்தில் இயற்கையின் பங்கு எவ்வளவு, மனிதப் பங்கு எவ்வளவு என்பது ஆய்வுக்குரியது. மரணத்தில் இருந்து பாடம் படிப்போம் புதிய இழப்புகள் நேராமல் காப்போம் என தன்னுடைய வேதனையை வெளிபடுத்தியுள்ளார்.

Update 02
குரங்கணி காட்டுத் தீயில் சிக்கி இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த மாவட்ட ஆட்சியாளர் பல்லவி கூறியுள்ளார்.

தேனி மாவட்டம் போடி அருகேயுள்ள குரங்கணி வனப் பகுதியில் மலையேறும் பயிற்சிக்காக சென்னையில் இருந்து 24 பேரும், திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் இருந்து 12 பேரும் சென்றிருந்தனர்.

கொழுக்குமலைப் பகுதியில் இருந்து நேற்று அவர்கள் அனைவரும் மீண்டும் அடிவாரத்துக்கு திரும்பியபோது, திடீரென காட்டுத் தீ ஏற்பட்டது.

இந்த தீ விபத்தில் சிக்கியவர்களில் இதுவரை 09 பேர் உயிரிழந்ததுடன், 27 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட 27 பேரும் தீக்காயங்களுடன் தேனி, மதுரை வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், குரங்கணி காட்டு தீயில் உயிரிழந்துள்ள 9 பேரில் 06 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்றும் 3 பேர் ஈரோட்டை சேர்ந்தவர்கள் என்றும் தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் கூறியுள்ளார்.

மீட்கப்பட்ட 27 பேரில் 10 பேருக்கு எந்தவித காயமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், குரங்கணி காட்டுத் தீயில் சிக்கி, சென்னையை சேர்ந்த புனிதா, அருண், பிரேமலதா, சுபா, விபின், அகிலா மற்றும் ஈரோட்டை சேர்ந்த விஜயா, விவேக், தமிழ்ச்செல்வி ஆகியோர் உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

எனினும் குரங்கணி காட்டுத்தீயில் மீட்கப்பட்ட 27 பேரில் 6 பேரின் நிலை தொடர்ந்தும் கவலைக்கிடமாக உள்ளதாக மதுரையில் சுகாதாரத்துறைச் செயலாளர் ஜே. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குரங்கணி விபத்து மனதைப் பிழியும் சோகம் என்று மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

அத்துடன், குரங்கணி காட்டுத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கமல்ஹாசன் தனது அனுதாபங்களை டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அத்துடன், காடுகளுக்கு மலையேற்றம் நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் ஏற்பாட்டாளர்கள் விதிகளை மீறுவதாக காட்டுயிர் ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

பணம் வசூலிப்பதை மாத்திரமே குறிக்கோளாக நினைக்கும் சில நிறுவனங்கள் மலையேற்றத்துக்கு குடும்பத்துடன் வரலாம் என பொறுப்பே இல்லாமல் அறிவிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஒரு சில நேரங்களில் காடுகளுக்கு மலையேற்றம் செல்பவர்கள் இறந்தும் போயுள்ளதாக காட்டுயிர் ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, குரங்கணி மலை ஏற்றத்தை கேரளம் – தமிழ்நாட்டில் உள்ள சில தனியார் ஒருங்கிணைப்பாளர்கள் ஏற்பாடு செய்துள்ளார்கள் என்றும் இந்த ஏற்பாட்டாளர்களுக்கு காடுகள் குறித்தும் காட்டுயிர் குறித்தும் எந்த அடிப்படை அறிவும் இல்லை என்றும் சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் காளிதாசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அவர்களுக்கு மலை ஏற்றம் என்பது வெறும் சாகசம் மட்டுமே என்றும் அங்குதான் தவறுகள் ஆரம்பிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Story

Our Other websites :

Tags; Tamil Nadu kurangani forest fire Nine dead 27 rescued